rain water enters ops house gradually evacuated by motor pumps

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்குள்ளும் மழை நீர் அதிக அளவில் வேகமாகப் புகுந்தது. இதனை வெளியேற்ற அதிகாரிகள் மோட்டார்களின் தயவை நாடினர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ளது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீடு. ஆழ்வார்பேட்டை பகுதியில் ஏற்கெனவே சாலைகளில் லேசாக மழை பெய்தாலே வெள்ளம் பெருகிவிடும். 

இந்நிலையில், ஆழ்வார் பேட்டையில் பிரதான பகுதியில் உள்ள ஓபிஎஸ்ஸின் வீட்டிலும் மழைநீர் புகுந்தது. தரைத் தளத்தில் மழைநீர் சூழ்ந்து இருப்பதால் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று இரவு பெய்த கனமழையால் ஓபிஎஸ் வீட்டுக்குள் மழைநீர் புகுந்தது. ஏற்கெனவே, கோபாலபுரம் பகுதியில் உள்ள திமுக., தலைவர் கருணாநிதியின் வீட்டினுள்ளும் மழை நீர் புகுந்தது குறிப்பிடத்தக்கது. 

அமைச்சர்கள், அதிகாரிகள் அதிகம் வசிக்கும், நந்தனம், ஆர்.ஏ.புரம், சேமியர்ஸ் ரோடு, பசுமை வழிச்சாலை ஆகிய இடங்களில் நீர் அதிகம் தேங்கியுள்ளது. மழை நீரைக் கடந்து வாகனங்கள் செல்லும் போது, பெரும்பாலான வாகனங்கள் நின்று விடுவதால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மழைக்காலத்துக்கு முன்னதாக மழை நீர் வடிகால் அமைப்புகளை சரி செய்ய வில்லை என்பதால், அவற்றில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தேங்கிய மழை நீர் மோட்டார்கள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. அடைப்புகளை சரிசெய்ய முழு வீச்சில் நடவடிக்கைகள் இந்தப் பகுதியில் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.