தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை முதல் தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது,
மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வந்த 'கியான்ட்' புயல் முழுவதுமாக வலு இழந்துள்ளது. தற்போது அது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில் நீடிக்கிறது.
இந்தநிலையில் இந்திய பகுதிகளில் இருந்து தென்மேற்கு பருவமழை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை வருகிற அக்டோபர் 30-ந்தேதி உருவாகுவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது.
அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில் வடகிழக்கு பருவமழை இயல்பாக 44 செ.மீட்டர் வரை பெய்யும். இந்த ஆண்டும் வடகிழக்கு பருவமழை இயல்புநிலையை ஓட்டியே இருக்கும். அதாவது 39 முதல் 44 செ.மீட்டர் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை நகரை பொறுத்தவரையில் ஒரு சில இடங்களில் மிதமான மழையை எதிர்பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.
