Rain for one hour Dams and pools filled Lightning strike coconut tree burned

ஈரோடு

ஈரோட்டில் சூறாவளிக் காற்றுடன் ஒரு மணிநேரம் விடாமல் பலத்த மழை பெய்ததில் தடுப்பணைகள் மற்றும் வனக்குட்டைகள் நிரம்பின. மின்னல் தாக்கியதில் தென்னை மரம் ஒன்று எரிந்து நாசமானது.

ஈரோடு மாவட்டம், தாளவாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் வானில் கருமேகங்கள் திரண்டன. பின்னர் மழை தூறிக்கொண்டே இருந்தது. 

இதனைத் தொடர்ந்து 2.30 மணிக்கு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை 3.30 மணி சுமார் ஒரு மணி நேரம் வரை நீடித்தது. 

இதனால் தாளவாடி, தொட்டகாஜனூர், சூசைபுரம், மல்லன்குழி, பாரதிபுரம், மெட்டல்வாடி, கும்டாபுரம், தொட்டாபுரம், சிக்கள்ளி, மரூர், நெய்தாளபுரம் உள்பட பல்வேறு கிராமங்களில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. 

விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கி நின்றது. அதுமட்டுமின்றி தாளவாடி பகுதியில் பலத்த சூறாவளிக்காற்றும் வீசியது. மேலும் தாளவாடி அருகே உள்ள சேஷன் நகரை சேர்ந்த விவசாயி ரவி என்பவரின் தோட்டதில் இருந்த தென்னை மரத்தை மின்னல் தாக்கியது. இதில் அந்த மரம் முழுவதும் எரிந்து நாசம் ஆனது.

கோடை மழை காரணமாக தாளவாடி பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.