கடந்த நவம்பர் 8ம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை வெளியிட்டது.

இந்த பணம் வங்கியில் கணக்கு வைத்துள்ளவர்களுக்கு வாரத்துக்கு 24 ஆயிரம் மட்டும் வழங்கப்படுகிறது. ஏடிஎம் மையங்களில் நாள் ஒன்றுக்கு ரூ.2000 மட்டும் கிடைக்கிறது. இந்த பணத்தை எடுக்க ஏராளமான பொதுமக்கள் தினமும் அதிகாலை முதல் மாலை வரை வங்கி மற்றும் ஏடிஎம் மையங்களில் கால் கடுக்க காத்திருக்கின்றனர். ஆனால், அதில் சிலருக்கு மட்டுமே பணம் கிடைக்கிறது. மற்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

மேலும்,, ஒரு சில வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்களுக்கு 4000 முதல் 6000 வரை மட்டுமே கொடுக்கப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் தினமும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் நடந்து வருகிறது.

இதற்கிடையில், புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை சிலர் பதுக்கி வைத்துள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பிரபல தொழிலதிபர்கள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி பல கோடி ரூபாய் புதிய 2000 நோட்டுகள், தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதையொட்டி, தொழிலதிபர் சேகர் ரெட்டி வீடு, அவரது தம்பி வீடு, நண்பர்களின் வீடுகள், அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில், சுமார் 135 கோடி பணமும், தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையிறல் தமிழக தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ் வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கனவே சேகர் ரெட்டி இடம் இருந்து 131 கோடி சவரன் 123 நகை பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அவருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற அடிப்படையில் சோதனை மொத்தம் 600 ஊழியர்கள் களத்தில் இருப்பதாக முதற்கட்ட தகவல்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, தொழிலதிபர் சேகர் ரெட்டியுடன், ராமமோகன் ராவ் நெருக்கமாக இருந்துள்ளார். சேகர் ரெட்டியிடம் இருந்த கணக்கில் காட்டப்படாத பணம், இவரிடம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சோதனை நடத்தி வருகிறோம் என்றனர்.