ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா நடந்ததாக புகார் வந்ததையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர், சிட்லபாக்கம் ராஜேந்திரன், நடிகர் சரத்குமார் மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதா லட்சுமி உள்ளிட்டோர் வீடு மற்றும் அலுவலகங்கள் என தமிழகத்தில் 35 க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி ரெய்டு நடத்தியது வருமானவரித்துறை.

சுமார் 17 மணிநேரம் படுத்தப்பட்ட இந்த ரெய்டில் பல்வேறு ஆதாரங்கள் சிக்கியதாகக் கூறப்பட்டது. இதனையடுத்து, கடந்த 9 ஆம் தேதி விஜயபாஸ்கர், சரத்குமார், சிட்லபாக்கம் ராஜேந்திரன், கீதாலட்சுமி உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வருமான வரித்துறை உத்தரவிட்டது. 

அதன்படி, 10 ஆம் தேதி காலை அமைச்சர் விஜயபாஸ்கர் சரத்குமார், சிட்லபாக்கம் ராஜேந்திரன், வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகினர். 

அங்கிருந்த சரத்குமாரிடம் சுமார் 5 மணி நேரம் அந்த அதிகாரிகள் விசாரணை செய்தனர். பின்னர் சரத்குமார் தனது காரில் தேனாம்பேட்டையில் உள்ள ராடன் நிறுவன அலுவலகத்துக்கு வந்தார். அவருடைய காரில் வருமான வரித்துறை அதிகாரிகளும் வந்தனர். ராடன் நிறுவனத்தின் வங்கி கணக்குகளும், சில ஆவணங்களும் சரத்குமார் பெயரிலும், ராதிகா பெயரிலும் இருந்ததால், அதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், ராடன் அலுவலகத்தில் இருந்த ஆவணங்களை வருமான அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த சோதனை இரவு 9 மணியை தாண்டியும் நீடித்தது. இந்தச் சோதனையின்போது சரத்குமாருடன் அவரது ஆடிட்டர், வழக்குரைஞர்கள் ஆகியோர் இருந்தனர்.சோதனையின் முடிவில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகை ராதிகாவுக்கும் சரத்குமாருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது.

இதுகுறித்து கணவன் மனைவி இருவரும் நேற்றைய தினம், வருமான வரி அலுவலகத்தில் ஆஜராகினர். அப்போது ராடன் நிறுவனத்தில் கைப்பற்ற பட்ட ஆதாரங்களை வைத்து, அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தியதாக கூறப்பட்டது.

தற்போது என்ன ஆதாரங்கள் ராடன் அலுவலகத்தில் சிக்கியது என்ன என தெரிய வந்துள்ளது, ராடன் நிறுவனத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது 4 கோடி ரூபாய் பணம் சிக்கியதாகவும், பல கோடி ரூபாய் ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் பலர் அடுத்து யார் வீட்டை தட்டுவார்கள் அதிகாரிகள் என்கிற பதற்றத்துடனே இருப்பதாக கூறப்படுகிறது.

தேர்தல் நேரத்தில் கோடிக்கணக்கில் பணம் கைமாறியிருக்ககூடும் என்ற நோக்கத்தில்தான் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் ராதிகா அலுவலகத்தில் ரூ 4 கோடி வரி ஏய்ப்பு செலுத்தாமல் இருந்த ஆவணங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.