Puzhal lake houses inhabited building occupiers Sale banner placed
சென்னை புழல் ஏரி பாலைவனமாக மாறிப் போயுள்ளது. மேலும், ஏரியின் கரையோரத்தில் “மனை விற்பனை” என்று பதாகை வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை மக்களின் குடிநீர்த் தேவையை பல ஆண்டுகளாக பூர்த்தி செய்யும் முக்கியமான ஏரிகளில் ஒன்றாக புழல் ஏரி. செங்குன்றத்தில் தொடங்கும் இந்த ஏரி திருமுல்லைவாயல், வெள்ளானூர் வரை நீண்டு கிடக்கிறது. 32 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட புழல் ஏரியின் தற்போதைய நிலைமையைக் கேட்டால் நீங்களே கண்ணீர் விட்டு அழுவீர்கள்.
புழல் ஏரியை தூர் வாரி, பராமரித்து நீரைச் சேமித்தால் ஆண்டு முழுவதும் தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் கிடைக்கும். ஆனால், அதிகாரிகளின் அலட்சியம் புழல் ஏரியை பலியாகிவிட்டது.
ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி, சீரழிந்துள்ளது என்பதுதான் புழல் ஏரியின் தற்போதைய நிலைமை.
புழல் ஏரி, பாலைவனம் போல் காட்சியளிக்கிறது. திருமுல்லைவாயலை ஒட்டியுள்ள பகுதியில் ஏரியின் நடுவில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
புழல் ஏரியின் கரையோரத்தில் “மனை விற்பனை” என்ற விளம்பர பதாகையும் வைக்கப்பட்டுள்ளது.
இது ஒருபக்கம் இருக்க, ஆவடி நகராட்சி நிர்வாகத்தினர், திருமுல்லைவாயலில் சேரும் கழிவு நீரை குழாய் மூலம் கொண்டு வந்து புழல் ஏரியில் விடுகின்றனர்.
இவையனைத்தும் நிர்வகிக்க வேண்டிய பொதுப்பணித் துறையினரின் பார்வைக்கு இந்த நிகழ்வுகள் தெரியவில்லையா? அல்லது கண்டும் காணாமல் இருக்கின்றனரா? என்பது கேள்விக் குறியாக இருக்கிறது.
தாமதிக்காமல் புழல் ஏரியை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு, பாலை வனமாக காட்சியளிக்கும் ஏரியை நன்முறையில் பராமரித்து குடிநீர் தேவையை வழக்கம் போல மக்களுக்கு வழங்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
