puduchery 3 rowdies murder
புதுச்சேரி அருகே நள்ளிரவில் மது குடித்துக் கொண்டிருந்த 3 ரவுடிகள் முன்விரோதம் காரணமாக குண்டுவீசி கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

புதுச்சேரி மாநிலம், முத்தரையர்பாளையம் ஜீவா வீதியை சேர்ந்தவர் நாய் சேகர் சண்முகாபுரம் அணைக்கரை வீதியை சேர்ந்தவர் ஜெரால்டு, முத்தரையர்பாளையம் காந்தி திருநல்லூரை சேர்ந்தவர் சதீஷ் மற்றும் மேட்டுப்பாளையம் சாரணப்பேட்டையை சேர்ந்தவர் புளியங்கொட்டை ரங்கராஜ் ஆகியோர் நண்பர்கள்.
நேற்று தீபாவளியை முன்னிட்டு இரவு இவர்களும் மேலும் 5 நண்பர்களும் மேட்டுப்பாளையம் ராம் நகரில் உள்ள இரும்பு பீரோ செய்யும் கம்பெனிக்குள் அமர்ந்து மது குடித்து கொண்டிருந்தனர்.
இரவு 11.30 மணி அளவில் 10-க்கும் மேற்பட்ட கும்பல் திடீரென அங்கு வந்து கம்பெனியை சுற்றி வளைத்தது. அவர்கள் மதுகுடித்து கொண்டிருந்தவர்களை நோக்கி வெடிகுண்டுகளை வீசினார்கள். இதில் குண்டு வெடித்து சிதறியது.
மதுகுடித்து கொண்டிருந்தவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். குண்டு வெடித்ததில் ஜெரால்டு அந்த இடத்திலேயே உயிரிழந்தார். மற்றவர்கள் படுகாயங்களுடன் எழுந்து ஓடினார்கள். அவர்களை ஓட ஓட விரட்டி அந்த கும்பல் வெட்டியது.

இதில் நாய் சேகர், சதீஷ் ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். புளியங்கொட்டை ரங்கராஜிக்கும் வெட்டு விழுந்தது. மற்றவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். அவர்களை கொலை கும்பல் விரட்டி சென்றது. ஆனால் அவர்கள் தப்பிவிட்டனர். பின்னர் கொலை கும்பல் அங்கிருந்து சென்றுவிட்டது.
இது குறித்து தகவலறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று, கொலை செய்யப்பட்ட 3 பேருடைய பிணத்தையும் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்யப்பட்ட நாய்சேகர் மீது ஏற்கனவே கொலை வழக்கு உள்ளது. கொலையுண்ட ஜெரால்டு, சதீஷ் மீதும் அடிதடி வழக்குகள் உள்ளன.
ஊசுட்டேரியில் 2015-ம் ஆண்டு சுரேஷ் என்பவர் கொலை செய்யப்பட்டார். அவரை நாய்சேகரும், அவரது கூட்டாளிகளும் கொன்றனர். இதற்கு பழிவாங்கும் நோக்கத்துடன் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
தீபாவளியன்று ஒரே இடத்தில் 3 பேர் கொலை செய்யப்பட்டு இருப்பது புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுவையில் வெடிகுண்டு வீசி கொலை செய்வது தொடர்ந்து நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
