ஜல்லிக்கட்டு போட்டி.! இத்தனை ஆயிரம் காளைகள், மாடு பிடி வீரர்கள் பங்கேற்பா.? வெளியான பட்டியல்
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான ஆன்லைன் பதிவு நிறைவடைந்துள்ளது. அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய மூன்று இடங்களிலும் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்கவுள்ள மாடுகள், மாடுபிடி வீரர்கள் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டி
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு வார காலமே உள்ளது. அந்த வகையில் பொங்கல் பண்டிகை என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது ஜல்லிக்கட்டு போட்டியாகும்,. தமிழர்களின் வீரத்தின் அடையாளமாக ஒவ்வொரு ஆண்டும் தைத்திங்கள் முதல் நாள் முதல் ஜல்லிக்கட்டு போட்டி மதுரையில் நடத்தப்படுகிறது. அவனியாபுரம் பகுதியில் ஜனவரி 14-ஆம் தேதியும்,15ஆம் தேதி பாலமேடு பகுதியிலும், 16ஆம் தேதி அலங்காநல்லூர் பகுதியில் வெகு விமர்சையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். இதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளோடு போட்டிகள் நடத்தப்படுகிறது. மாடு பிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் பல்வேறு நிபந்தனையின் கீழ் போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கப்படுகிறது.
ஆன்லைன் பதிவு முடிந்தது
அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெறக்கூடிய ஜல்லிக்கட்டு போட்டிக்காக ஆன்லைன் பதிவு கடந்த 6ஆம் தேதி மாலை 5 மணிக்கு தொடங்கி நேற்று மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது. அந்த வகையில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கு பெறக்கூடிய ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மருத்துவத் தகுதி சான்றிதழ் பெற்றவர்கள் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டது. இதே போல மாடுபிடி வீரர்களும் சான்றிதழ் சமர்பித்தனர். அந்த வகையில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆன்லைன் பதிவு நேற்று மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது. இதனையடுத்து விண்ணப்பித்தவர்களின் பட்டியலை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு-வெளியான பட்டியல்
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில 14ஆம் தேதி நடைபெறக்கூடிய போட்டியில் பங்கேற்க 2026 ஜல்லிக்கட்டு காளைகளும், 1735 மாடுபிடி வீரர்களும்பதிவு செய்துள்ளனர். 15ஆம் தேதி பாலமேட்டில் நடைபெறக்கூடிய ஜல்லிக்கட்டுக்கு - 4820 ஜல்லிக்கட்டு காளைகளும், 1914 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்துள்ளனர். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பங்கு பெறக்கூடிய உலகப் புகழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு 5786 ஜல்லிக்கட்டு காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதே போல 1914 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்துள்ளனர். ஒட்டுமொத்தமாக தை மாதம் மதுரையில் நடைபெறக்கூடிய ஜல்லிக்கட்டு போட்டிக்கு 12, 632 ஜல்லிக்கட்டு காளைகளும், 5347 மாடு பிடி வீரர்களும் ஜல்லிக்கட்டு போட்டியிலே பங்கு பெறுவதற்காக ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது