கடலூரில் அரசியல் கட்சிகள் சார்பில் நடைபெற்ற இரயில் மறியல் போராட்டத்தின்போது காவல்துறையினர் நடத்திய தடியடியைக் கண்டித்து வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வலியுறுத்தி கடலூர் திருப்பாதிரி புலியூரில் அக்டோபர் 17-ஆம் தேதி இரயில் மறியல் போராட்டம் நடத்துவதற்காக பல்வேறு அரசியல் கட்சியினர், விவசாய அமைப்பினர் இரயில் நிலையத்துக்குள் செல்ல முயன்றனர். அப்போது, காவல்துறையினர் நடத்திய தடியடியில் 10 பேர் காயமடைந்தனர்.

இதையடுத்து, நடைபெற்ற அரசியல் கட்சியினரின் (அதிமுக, பாமக, பாஜக தவிர) கூட்டத்தில், காவல்துறையினரின் தடியடி நடவடிக்கையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி கடலூர் தலைமை தபால் நிலையம் முன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

தடியடி சம்பவம் தொடர்பாக தமிழக அரசு விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் திமுக மாணவரணி மாநிலச் செயலர் இள.புகழேந்தி, நகரச் செயலர் து.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் டி.ஆறுமுகம், நகரச் செயலர் வி.சுப்புராயன், மதிமுக மாவட்டச் செயலர் ஜெ.ராமலிங்கம், நகரச் செயலர் பா.ராமசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் டி.மணிவாசகம், துணைச் செயலர் வி.குளோப், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலர் சா.முல்லைவேந்தன், நாடாளுமன்ற தொகுதிச் செயலர் பா.தாமரைச்செல்வன், அமைப்புச் செயலர் தி.ச.திருமார்பன், தமுமுக மாவட்ட துணைச் செயலர் எஸ்.மன்சூர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி உள்துறைச் செயலர், காவல் துறை இயக்குநர் மற்றும் மனித உரிமை ஆணையத்துக்கு அரசியல் கட்சிகள் சார்பில் மனு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.