Protest against RSS President Mohan Bhagwat for attacked Sitaram Yechury

திண்டுக்கல்

சீதாராம் யெச்சூரியை தாக்கியதைக் கண்டித்து, திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தலைவர் மோகன் பகவத்தின் உருவபொம்மை எரிக்கப்பட்டது.

டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியை தாக்கிய சம்பவத்தைக் கண்டித்து திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கல்யாணசுந்தரம், கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி பேசியது:

“பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில், தாக்குதல் சம்பவங்கள் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

கம்யூனிஸ்டு கட்சியின் கடைசி தொண்டன் இருக்கும் வரை இந்தியாவில் மதவாத சக்திகளை தலைதூக்க விடமாட்டோம்.

தேர்தலின்போது கொடுத்த வாக்குறிதிகள் எதையும் கடந்த மூன்று ஆண்டுகளில் நரேந்திரமோடி நிறைவேற்றவில்லை.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயுக்கான மானியம் குறைக்கப்பட்டுள்ளதால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ்.சின் கைப்பாவையாக பா.ஜ.க. செயல்படுகிறது” என்று அவர் காட்டமாகக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தலைவர் மோகன் பகவத்தின் உருவபொம்மையை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எரித்தனர்.

பின்னர், காவலாளர்கள் அந்த உருவபொம்மையை தண்ணீரை ஊற்றித் தீயை அணைத்தனர்.