திருவண்ணாமலை

பெருங்குளத்தூர் கிராமத்தில் சாராயக் கடை திறக்க தடை செய்து உத்தரவிட வேண்டும் என்று மாவட்ட வருவாய் அலுவலரிடம் மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைப்பெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் இரத்தினசாமி தலைமை வகித்தார். ஆட்சியர் அலுவலகத்தின் தரை தளத்தில் மாற்றுத் திறனாளிகளிடமும், கூட்டரங்கில் மற்றவர்களிடமும் மனுக்கள் பெற்றுக் கொள்ளப்பட்டன.

இதில் முதியோர் உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, ரே‌சன் கார்டு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 400–க்கும் மேற்பட்டோர் மனுக்களை அளித்தனர்.

பின்னர், மக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட வருவாய் அலுவலர் இரத்தினசாமி உத்தரவிட்டார். மேலும், நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இந்தக் கூட்டத்தில் பெருங்குளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் மனு ஒன்றை அளித்தனர்.

அதில், கூறியிருப்பதாவது:–

“எங்கள் ஊரில் 3500 குடும்பங்கள் உள்ளன. எங்கள் ஊர் இராயண்டாபுரம் செல்லும் சாலையோரம் புதிதாக சாராயக் கடை திறக்கப்பட உள்ளதாக தெரிய வருகிறது.

இங்கு சாராயக் கடை திறக்கப்பட்டால் மக்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு இடையூறு ஏற்படும். குடிகாரர்கள் போதையில் ஆபாச வார்த்தைகளால் பேசி வீண் தகராறில் ஈடுபடுவார்கள். ஊரின் அமைதி கெட்டுவிடும்.

மேலும், புதிதாக திறக்கப்பட உள்ள சாராயக் கடை அருகில் அரசு மேல்நிலைப்பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், உண்டு உறைவிடப்பள்ளி ஆகியவை உள்ளன. இதனால் பல குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வந்துவிடும். இந்த இடத்தில் சாராயக் கடை திறக்கக்கூடாது.

எனவே, இந்த இடத்தில் சாராயக் கடை திறக்க தடை செய்து உத்தரவிட வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.