அரியலூர்

அரியலூரில் பேராசிரியர்கள் பணிநீக்கம் செய்ததைக் கண்டித்து தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகே பொய்யூர் மேலக்கருப்பூர் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. 

இந்தக் கல்லூரியில் 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.  இந்தக் கல்லூரியில் 65 பேர் பேராசிரியர்களாகவும், அலுவலர்களாகவும் பணிபுரிந்து வருகின்றனர். 

இந்த நிலையில் கல்லூரியில் உள்ள 8 பேராசிரியர்களை கல்லூரி நிர்வாகம் பணிநீக்கம் செய்ததைக் கண்டித்தும், அரசு வழங்கும் கல்வி உதவித்தொகையை மாணவர்களுக்கு வழங்காமல் மோசடி செய்வதாகவும், கணிணி ஆய்வகம் மற்றும் லேப் வசதி முழுமையாக செய்து தரவில்லை என்றும் குற்றஞ்சாட்டி மாணவர்கள் நேற்று வகுப்பைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் கல்லூரி நிர்வாகம் மற்றும் காவலாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி மாணவர்களின் போராட்டத்தை கைவிட செய்தனர்.