இந்த பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு.. வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு.!
தமிழக வேளாண் பட்ஜெட்டை 3வது முறையாக வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அப்போது, விவசாயிகளை ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
கம்பு, கேழ்வரகு, திணை, சாமை உள்ளிட்ட பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு என தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வேளாண் பட்ஜெட்டை 3வது முறையாக வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அப்போது, விவசாயிகளை ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் இரகங்களான தூய மல்லி, சீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, கிச்சிலி சம்பா, தங்க சம்பா, கீரை சம்பா ஆகியவற்றைப் பாதுகாத்து பரவலாக்கிட, நெல் ஜெயராமன் மரபுசார் நெல் இரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தில், 2021-22 ஆம் ஆண்டு. 196 மெட்ரிக் டன் விதைகள் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட்டுள்ளன. அதைப்போன்றே, இவ்வாண்டும் அரசு விதைப் பண்ணைகளில், 200 ஏக்கர் பரப்பளவில் விதை உற்பத்தி செய்யப்பட்டு. மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும். இதற்கென 50 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
மேலும், அகில இந்திய அளவிலான பாரம்பரிய நெல் விதைகளை, இனத் தூய்மையுடன் விதை வங்கியில் பராமரித்து வரும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக, 10 விவசாயிகளுக்கு வரும் ஆண்டில் தலா மூன்று இலட்சம் ரூபாய் வீதம் 30 இலட்சம் ரூபாய் வழங்கப்படும்.
விவசாயிகளுக்குப் பரிசு
நெற்பயிரில் மாநில அளவில் அதிக விளைச்சல் பெறும் விவசாயிக்கு மட்டும். ஐந்து இலட்சம் ரூபாய் பரிசினை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. அனைத்துப் பயிர்களுமே அரவணைக்கத்தக்கவை என்பதை அடிப்படையாகக் கொண்டு. நெல்லுக்கு வழங்கி வந்ததை, சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள் போன்றவற்றிற்கும் வழங்கவேண்டும் என்கிற அடிப்படையில், வரும் ஆண்டு முதல் கம்பு, கேழ்வரகு. தினை, சாமை, குதிரைவாலி, துவரை, உளுந்து, பச்சைப் பயறு, நிலக்கடலை, எள், கரும்பு போன்ற பயிர்களைச் சாகுபடி செய்து மாநில அளவில் அதிக விளைச்சல் பெறும் விவசாயிக்கு தலா ஐந்து இலட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்.
அதேபோல, உணவு தானியப் பயிர்கள் உற்பத்தி, உற்பத்தித் திறனில் சிறந்து விளங்கும் களப்பணியாளர்கள், வட்டார அலுவலர்கள், மாவட்ட அலுவலர்களை ஊக்கப்படுத்தும் விதமாக வரும் ஆண்டு முதல் விருதுகள் வழங்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.