பாகிஸ்தானின்  தாக்குதல்களை முறியடித்து, இந்தியா பதிலடி கொடுத்தது. இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கு மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் இந்திய ராணுவத்தை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த பேசிராசியர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் மீது தாக்குதல்

ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் உயிர் இழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அரசு அடுத்தடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. சிந்து நதி நீர் ஒப்பந்தம், பாகிஸ்தானியர்கள் விசா ரத்து உள்ளிட்ட நடவடிக்கையை எடுத்தது. அடுத்ததாக பாகிஸ்தானுக்கு எதிராக போரை தொடுக்க நாடு முழுவதும் போர் ஒத்திகை நடத்த இந்திய அரசு அறிவித்த போதும் யாரும் எதிர்பார்க்காத வகையில் இரவோடு இரவாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தது.

பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை

இதில் 50க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் அறிவித்தது. இதனையடுத்து இந்தியா- பாகிஸ்தான் இடையே எல்லையில் மோதல் தொடங்கியுள்ளது. இந்தியா மீது பாகிஸ்தான் 15 ஏவுகனைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்கியது. இதனை முறியடித்த இந்திய ராணுவம், பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி, லாகூர் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில் பாகிஸ்தான் தாக்குதலை தொடர்ந்தால் கடும் விளைவுகளை சந்திக்கும் என இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கு இந்திய மக்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

இந்திய ராணுவத்தை விமர்சித்த பேராசிரியர் பணி நீக்கம்

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பழி வாங்கியுள்ளதாகவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், சென்னை எஸ்ஆர்எம் கல்லூரியில் உதவிப்பேராசிரியராக பணிபுரியும் லோரா என்பவர் இந்திய ராணுவத்தை விமர்சித்து சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கல்லூரி நிர்வாகத்திடம் சிலர் புகார் அளித்த நிலையில் பேராசிரியரை கல்லூரியில் இருந்து பணி நீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.