கல்வி பகவான் என கூறி சர்ச்சையை கிளப்பிய சாமியாரும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை அருகே பூந்தமல்லி அடுத்த நேமம் கிராமத்தில் கல்கி ஆசிரமம் உள்ளது. இங்கு விஷ்ணுவின் 10வது அவதாரம் எடுத்த கல்வி பகவானின் கோயில் என கூறி,விஜயகுமார் நாயுடு என்பவரை, தினமும் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

அதேபோல் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வரதய்யா பாளையத்தில் கல்கி பகவான் ஆசிரமம் உள்ளது. உலகத்தை காக்க வந்த கடவுள் எடுத்து வந்த அவதாரம் என கூறி, பொதுமக்களுக்கு பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றியதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் கல்கி பகவான் என கூறப்படும் விஜயகுமார் மீது, பல்வேறு நில மோசடி, பொதுமக்களிடம் ஏமாற்றி பணம், நகைகளை பறித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதையடுத்து அவர் மீது, திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்திலும் புகார்கள் குவிந்தன. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இச்சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில், விஜயகுமாருக்கு நேற்று இரவு திடீர் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அவரை சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு ஐசியு வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கல்கி பகவான் எனப்படும் விஜயகுமார், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்ததும், ஏராளமான பக்தர்கள் அங்கு திரண்டனர்.

ஏற்கனவே முதலமைச்சர் ஜெயலலிதா, உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரவு மற்றும் பகலுமாக ஏராளமான அதிமுகவினர் அங்கு குவிந்துள்ளனர். முதலமைச்சர் ஜெயலலிதா குணமடைய வேண்டும் என எந்நேரமும் பல்வேறு தரப்பினர், பல்வேறு யாக பூஜைகளையும், பிரார்த்தனைகளையும் செய்து வருகின்றனர்.

இந்த வேளையில் சாமியார் ஒருவர் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவரை பார்க்க ஏராளமான பக்தர்களும் திரண்டுள்ளதால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.