கடந்த 15ஆம் தேதி நள்ளிரவு நாகை - வேதாரண்யம் இடையே கஜா புயல் கரையைக் கடந்தது. இதன் தாக்கம் அதைச் சுற்றியுள்ள அனைத்து மாவட்டங்களையும் உலுக்கியது. அனைத்து இடங்களிலும் வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டன. மரங்கள் அனைத்தும் விழுந்து சேதமடைந்தன. மின்கம்பங்களும் விழுந்ததால் இன்னும் பல கிராமங்களுக்கு மின் விநியோகம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள், பெரியவர்கள், கர்ப்பிணிகள் என பலரும் சிரமப்பட்டு வருகின்றனர்.

நாகப்பட்டினம் மாவட்டம், தெற்களத்தூர் பகுதியில் வசித்துவரும் ரமேஷ் என்பவரின் மனைவி மஞ்சுளா. 21 வயதாகும் இவர் இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்து, பிரசவத்துக்காகக் காத்திருந்தார். இந்த நிலையில், அனைத்து செய்தி ஊடகங்களிலும் கஜா புயல் கரையைக் கடக்கவுள்ளதால், மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தி தொடர்ந்து செய்திகள் வெளியிட்டுக் கொண்டிருந்தன.

பிரசவத்துக்கு இரண்டு நாட்கள் இருப்பதால், அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சென்று தங்குமாறு மஞ்சுளாவின் உறவினர்கள் அறிவுரை கூறியுள்ளனர். எந்தவொரு தாமதமும் இல்லாமல், நவம்பர் 14ஆம் தேதி மாலையில், 2 கிமீ தொலைவில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மஞ்சுளாவைச் சேர்த்தார் ரமேஷ்.

வியாழக்கிழமை வரை மஞ்சுளா மகப்பேறு வார்டில் இருந்தார். “அன்று மாலையில் மின்சாரம் நின்றுவிட்டது. இரவில் காற்று அதிகமாக வீசியது. இது எனக்குப் பயத்தை தந்தது. பலத்த காற்றினால் ஜன்னல்கள் உடைந்து, அதன்வழியாக மழைநீர் உள்ளே புகுந்தது. இருட்டு அறைக்குள் பயத்தில் உறைந்திருந்தேன். என் அருகில் என் கணவர்மட்டும்தான் இருந்தார்” என தனது அனுபவத்தை விவரித்தார் மஞ்சுளா.

“கஜா புயலினால் சாலைகள்தோறும் மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்து கிடந்தன. செல்போனில் நெட்வொர்க்கும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், நள்ளிரவுக்குப் பிறகு மஞ்சுளாவுக்குப் பிரசவ வலி ஏற்பட்டது. அப்போது, ராமமூர்த்தி என்ற மருத்துவரும் சுந்தரி என்ற செவிலியரும் பணியில் இருந்தனர். மருத்துவமனையில் மின்சாரம் இல்லாததால், எங்கும் இருட்டு மயமாக இருந்தது. விடியும் வரைக்கும் காத்திருக்க முடியாது, உதவிக்காக யாரையும் அழைக்க முடியாது என்ற நிலையில், செல்போன் டார்ச் வெளிச்சத்தின் மூலம் பிரசவம் பார்க்க முடிவு செய்தார் மருத்துவர் ராமமூர்த்தி.

செல்போன் டார்ச் வெளிச்சத்தில் மஞ்சுளா பிரசவிப்பதற்கு மருத்துவர்கள் உதவி செய்தனர். நல்ல வேளையாக, அவருக்குச் சுகப் பிரசவம் நடந்தது. சிறிது நேரத்திலேயே 2.5 கிலோ எடையுடன் அழகான பெண் குழந்தை பிறந்தது.

மருத்துவருக்கு நன்றி சொல்லி விட்டு, எங்கள் குழந்தைக்கு ‘கஜஸ்ரீ’ என்று பெயர் வைக்கவுள்ளதாகவும் அவரிடம் தெரிவித்தோம் என மஞ்சுளா கூறினார்.

“இதுபோன்ற சூழ்நிலையில்தான்,இரண்டு வருடத்திற்கு முன்பு எங்களது முதல் மகள் கனிஷ்கா இதே மருத்துவமனையில் பிறந்தார். புயல் வருவதற்கு முன்பே மருத்துவமனையில் மஞ்சுளாவைச் சேர்த்தது நல்லதாக அமைந்தது. இல்லையென்றால், புயலினால் அவரை மருத்துவமனைக்கு அழைத்து வருவது மிகப்பெரிய சவாலாக இருந்திருக்கும், அவரை தோளில்தான் சுமந்துகொண்டு வந்திருக்க வேண்டும்” என மஞ்சுளாவின் கணவர் ரமேஷ் கூறினார்.

இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை வரை மஞ்சுளாவும், கஜஸ்ரீயும் மருத்துவமனையில் இருந்தனர். ஏனெனில், இவர்கள் வசித்து வந்த மண் வீடு கஜா புயலினால் சேதமடைந்திருந்தது. அது சரிசெய்யப்பட்ட பிறகுதான் இருவரும் வீடு திரும்பினர்.