postal Staffs strike for 16th day affected mail service Will the government take action?......
தஞ்சாவூர்
தபால் ஊழியர்கள் 16–வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சையில் ஆர்ப்பாட்டமும் செய்தனர். இதனால் தபால்கள் தேங்கியுள்ளன.
தஞ்சாவூர் மாவட்டத்தில் அகில இந்திய கிராமிய தபால் ஊழியர் சங்கம், தேசிய கிராமிய தபால் ஊழியர் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
“கிராமிய தபால் ஊழியர்களுக்கு 7–வது ஊதியக்குழுவுக்காக கமலேஷ் சந்திரா தலைமையிலான கமிட்டி அமைக்கப்பட்டு, அந்த கமிட்டி அளித்த பரிந்துரையை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும்.
நீண்ட நாட்களாக தபால் துறையில் தற்காலிகமாக பணி புரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
பெண் ஊழியர்களுக்கு 6 மாத பேறுகால விடுப்பு வழங்க வேண்டும்.
ஊழியர்கள் ஓய்வு பெறும்போது பணிக்கொடை தொகையாக ரூ.5 இலட்சம் வழங்க வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைப்பெற்று வருகிறது.
இந்தப் போராட்டம் 16–வது நாளாக நேற்றும் நீடித்தது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஊழியர்கள் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு தலைவர் ஜானகிராமன் தலைமை வகித்தார். இதில் நிர்வாகிகள் அரசு, ஸ்ரீதரன், கருப்புசாமி, முனியகுமரன், தசரதன், மருதையன், பால்ராஜ், புண்ணியமூர்த்தி மற்றும் பலர் பங்கேற்று பல்வேறு முழக்கங்களை எழுப்பினர்.
தஞ்சை கோட்டத்தில் தஞ்சை, பாபநாசம், மன்னார்குடி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 235 கிளை தபால் நிலையங்கள் உள்ளன. இங்கு பணி புரியும் 570 ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.
ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக பதிவு தபால், ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை, ஏ.டி.எம். கார்டு போன்றவை கிளை தபால் நிலையங்களில் தேங்கி கிடக்கின்றன. இதனால் கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
