தருமபுரி

தருமபுரியில் ஜெயலலிதாவின் திட்டங்களால் ஏழை, எளிய மக்கள் ஏழு வருடங்களில் எவ்வளவு  பயனடைந்து உள்ளார்கள் என்று புள்ளிவிவரத்தோடு தெரிவித்துள்ளார் அமைச்சர் கே.பி.அன்பழகன்.

நபார்டு திட்டத்தின் கீழ் தர்மபுரி மாவட்டத்தில் சின்னவத்தலாபுரம், செம்மாண்டகுப்பம், ஒடசல்பட்டி ஆகிய மூன்று கிராமங்களில் கால்நடை பராமரிப்புதுறை சார்பில் ரூ.69 இலட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் புதிய கால்நடை மருந்தகங்கள் கட்டப்பட்டுள்ளன. 

நேற்று நடைப்பெற்ற இந்தக் கட்டிடங்களின் திறப்பு விழாவுக்கு ஆட்சியர் மலர்விழி தலைமை வகித்தார். இதில், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் ராஜமனோகரன் வரவேற்று பேசினார். 

துணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட ஊராட்சிக்குழு முன்னாள் தலைவர் டி.ஆர்.அன்பழகன், நகராட்சி முன்னாள் தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இவ்விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பங்கேற்று புதிய கால்நடை மருந்தக கட்டிடங்களை குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். 

இந்த விழாவில் அமைச்சர் அமைச்சர் கே.பி.அன்பழகன், "தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஏழு ஆண்டுகளில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் 20 கிளை நிலையங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. 12 கால்நடை மருந்தகங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. 

கடந்த 2011-ஆம் ஆண்டு ஜெயலலிதா, கிராமப் புறங்களில் வறுமைகோட்டிற்கு கீழ் வாழும் ஏழை எளியோருக்கு விலையில்லா கறவைபசுக்கள், செம்மறிஆடுகள் வழங்கும்திட்டத்தை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தினார். 

இந்தத் திட்டத்தின் மூலம் தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 7 ஆண்டுகளில் 23 ஊராட்சிகளில் 1150 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 23 இலட்சம் மதிப்பீட்டில் 1150 கறவை பசுக்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதேபோன்று செம்மறியாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்த 7 ஆண்டுகளில் 27 ஆயிரத்து 190 பயனாளிகளுக்கு ரூ.35 கோடி மதிப்பில் 1 இலட்சத்து 8 ஆயிரத்து 760 ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன. 

அதேபோன்று, நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின்கீழ் கடந்த 6 ஆண்டுகளில் ரூ.3 கோடியே 90 இலட்சம் மதிப்பீட்டில் 975 பயனாளிகள் நாட்டுக்கோழி பண்ணைகள் அமைத்து பயனடைந்து உள்ளனர். 

இதேபோன்று, புறக்கடை கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.47 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் 1940 பயனாளிகளுக்கு 100 சதவீத மானியத்தில் கோழிக்குஞ்சு கூண்டுகள் வழங்கப்பட்டுள்ளது. 

இதுபோன்ற திட்டங்களால் ஏழை, எளிய மக்கள் பயனடைந்து வருகிறார்கள்" என்று அவர் பேசினார்.

இந்த விழாவில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் தியாகராஜன், பேரூராட்சி முன்னாள் தலைவர் சுப்பிரமணியன், ஒன்றியக்குழுமுன்னாள் தலைவர் மகேந்திரன், மத்திய கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் வேலுமணி, கூட்டுறவு சங்க தலைவர்கள் கோவிந்தசாமி, சிவப்பிரகாசம், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கந்தசாமி, கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் ராஜா மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர். 

இந்த விழாவின் முடிவில் துணை இயக்குனர் வேடியப்பன் நன்றி தெரிவித்தார்.