ஜல்லிக்கட்டு நடக்காது…உறுதி செய்த  பொன். ராதா கிருஷ்ணன்

உச்சநீதிமன்றத்தின் தடை உத்தரவால், கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படாமல் உள்ளது.

இந்தாண்டு, ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என தமிழகம் முழுவதும், பல்வேறு தரப்பினர் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தினர்.

சென்னை, மதுரை, திருச்சி, நாமக்கல், நெல்லை,கோவை,வேலுர் என தமிழகத்தின் அனைத்தப் பகுதிகளிலும் மாணவ.மாணவிகள், பொது மக்கள், அரசியல் கட்சியினர் என மிகத் தீவிரமாக போராட்டம் நடைபெற்றது.

திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். அவசரச்சட்டம் இயற்றி ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.

மத்திய அமைச்சராக உள்ள பொன். ராதா கிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் கடந்த ஓராண்டாகவே ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடைபெறும் என கூறிவந்தனர்.

அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது என்றும் அவசரச் சட்டம் இயற்றப்படும் என்றும் உறுதியாக கூறிவந்தனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூட ஜல்லிக்கட்டு நடக்கும் என தெரிவித்திருந்தனர்.

இதனிடையே நேற்று செய்தியாளர்களிடையே பேசிய பொன். ராதா கிருஷ்ணன், இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த முடியாததற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார். மேலும் இந்த ஆண்டு பொங்கல் கொண்டாடப் போவதில்லை எனவும் கூறினார்.

பொங்கல் தினமாக இன்றாவது மத்திய அரசு அவசரச் சட்டம் இயற்றி ஜல்லிக்கட்டு நடத்த முயற்சி செய்யும் என மிகவும் நம்பிக்கையுடன் இருந்த தமிழக மக்களின் நம்பிக்கை பொய்த்துப்போய் விட்டது என்றே சொல்லலாம்.