வியாசர்பாடி எஸ்ஏ காலனி ஜெயகோபி (51). அதே பகுதியில் திருமண பத்திரிகை விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

நேற்று இரவு ஜெயகோபி, கொடுங்கையூர் மீனாம்பாள் சாலையில் உள்ள டாஸ்மாக் பாருக்கு சென்றார். அங்கு மது அருந்திய பிறகு, சைடிஷ் சாப்பிட்டதற்கான பணம் கொடுக்காமல், அங்குள்ள ஊழியர்களிடம் தகராறு செய்தார். அதை தட்டிக் கேட்டவர்களை மிரட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.

தகவலறிந்து கொடுங்கையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அங்கு ரகளையில் ஈடுபட்ட ஜெயகோபியை பிடித்து, காவல் நிலையம் கொண்டு சென்றனர். அங்கு எஸ்ஐ விமலேஷ் விசாரணை நடத்தினார். அப்போது, அவரையும் அவதூறாக பேசிய ஜெயகோபி, பணியில் இருந்த போலீஸ்காரர்களிடம் தகராறு செய்தார்.

அந்த நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட பயிற்சி இன்ஸ்பெக்டர் பத்மாவதி, காவல் நிலையம் வந்தார். பின்னர், ஜெயகோபி மீது வழக்குப்பதிவு செய்யும்படி அவர் கூறினார்.

அதற்குள், சில வழக்கறிஞர்கள் காவல் நிலையத்துக்குவந்தனர். அங்கு ஜெயகோபியை விடுவிக்கும்படி பேசினர். இந்த பேச்சுவார்த்தை சுமார் ஒன்றரை மணிநேரத்துக்கு நீண்டது.

பின்னர் ஒரு வழியாக பஞ்சாயத்து முடிந்து, எவ்வித பதிவோ, புகாரோ இல்லாமல் ஜெயகோபி விடுவிக்கப்பட்டார். அங்கு சந்தேக கேசில் பிடிக்கப்பட்டு காவல் நிலையத்தில் இருந்த சிலர், விநாயகர் சதுர்த்தி கொண்டாடத்துக்கு கல்லா கட்டிவிட்டார்கள் என கூறி கமான்ட் அடித்து கொண்டனர்.