இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் ஆயுத பூசை நடத்த, துப்பாக்கி கேட்டதால் கொடுத்த ஆயுதப்படை காவலாளர் மீது ஒழுங்குநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு வழங்கப்பட்டு இருப்பதுடன் இதுகுறித்து உயர் காவல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத். இவர் ஆயுத பூசையன்று, 2 துப்பாக்கிகள் மற்றும் வாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்து கோவையில் உள்ள அவரது வீட்டில் பூசை நடத்தி, அதனை முகநூலில் வெளியிட்டார்.

இது குறித்து அர்ஜுன் சம்பத் மீது, கோவை சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பூசைக்கு பயன்படுத்திய ஒரு துப்பாக்கி, கோவை நகர ஆயுதப்படை காவலில் பயன்படுத்தும் துப்பாக்கி என்று காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அர்ஜுன் சம்பத்தின் பாதுகாப்புக்கு ஆயுதப்படை காவலாளர் முத்து (30) என்பவர் நியமிக்கப்பட்டு, அவருக்கு துப்பாக்கி வழங்கப்பட்டு இருந்தது. அந்த துப்பாக்கியை அர்ஜுன் சம்பத் பூசை நடத்த கேட்டு வாங்கியுள்ளார். முத்துவும் அவருக்கு கொடுத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக ஆயுதப்படை காவலாளி முத்துவுக்கு 3–பி சட்டப்பிரிவின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், விளக்கம் கேட்டு நோட்டீசும் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘இந்த ஒழுங்கு நடவடிக்கையால் ஆயுதப்படை காவலாளியின் பதவி உயர்வு உள்ளிட்டவை பாதிக்கப்படும். விசாரணை முடிவில் தேவைப்பட்டால் தற்காலிக பணி நீக்கம் செய்யப்படலாம்‘ என்று தெரிவித்தனர்.