விருதுநகர்

பாஸ்போர்ட் அலுவலகம் காவல் ஆய்விற்காக பாஸ்போர்ட் விண்ணப்பங்களை அவற்றை குறித்த காலத்திற்குள் முடிக்காமல் காவல்துறை அலட்சியம் காட்டுவதால், பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தவர்களும், பாஸ்போர்ட் அலுவலகமும் அப்செட்டில் இருக்கின்றன.

தென் மாவட்டங்களில் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) கேட்டு மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பம் பண்ணுவர். அந்த விண்ணப்பங்களை பரிசீலித்து நேர் காணல் நடத்தி பாஸ்போர்ட்களை வழங்கி வருகிறது மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம்.

பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் விண்ணப்பதாரர் அளித்துள்ள தகவல்கள் சரியானது தான் என்றும், அவர்கள் மீது ஏதேனும் குற்ற பதிவுகள் உள்ளதா? என்றும் ஆய்வு செய்வதற்காக விண்ணப்பதாரர்கள் வசித்து வரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களுக்கு விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.

அங்கிருந்து சம்மந்தபட்ட விண்ணப்பதாரர் வசிக்கும் பகுதியில் உள்ள காவல் நிலையங்களுக்கு விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட்டு காவல் ஆய்வாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்ட பின்னர் அதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பர்.

பின்னர், அங்கிருந்து ஆய்வு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதுதான் இயல்பான நடைமுறை.

இந்த நடைமுறையில் உள்ள விதிகளின் படி பாஸ்போர்ட் விண்ணப்பித்த நாளில் இருந்து 21 நாள்களுக்குள் பாஸ்போர்ட் வழங்கப்பட வேண்டும். அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் காவல் ஆய்வு என்பது கட்டாயம்.

அரசு ஊழியர்கள் தங்களது அடையாள சான்றினை சமர்ப்பிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு காவல் ஆய்வில் இருந்து தளர்வு அளிக்கப்படுகிறது.

விருதுநகர் மாவட்டத்தை பொருத்தவரை ஆயிரத்து 360 விண்ணப்பங்கள் காவல் ஆய்வு முடிக்கப்படாமல் காவல் நிலையங்களிலேயே முடங்கி கிடக்கிறது. 15 விண்ணப்பங்கள் விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட்டு 21 நாள்களுக்கு மேலாகியும் இன்னும் காவல் ஆய்வு முடிக்கப்படவில்லை.

காவலாளர்கள் ஒவ்வொரு விண்ணப்பத்தையும் குறிப்பிட்ட நாள்களுக்குள் ஆய்வு செய்து அனுப்பினால் அவர்களுக்கு கட்டணமாக ரூ.150–ம், தாமதமாக அனுப்பும் பட்சத்தில் கட்டணமாக ரூ.100–ம் வழங்கப்படுகிறது.

பாஸ்போர்ட்டுக்காக விண்ணப்பிப்பவர்களில் பெரும்பாலானோர் உடனடி தேவைக்காகவே விண்ணப்பிக்கும் நிலையில், காவலாளர்கள் ஆய்வுக்கு தாமதப்படுத்தும் பட்சத்தில் பாஸ்போர்ட் வழங்குவதிலும் தாமதம் ஏற்படுவதால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

இதுகுறித்து, “மாவட்ட காவல் நிர்வாகம் பாஸ்போர்ட் விண்ணப்பங்களை ஆய்வு செய்வதில் அலட்சியமாக இருக்கிறது. குறைந்த கால அவகாசத்தில் ஆய்வு பணியை முடித்து விண்ணப்பங்களை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பாஸ்போர்ட் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.