கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடந்து வருகிறது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் கல்லூரி மாணவர்கள், ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களிடம் போலீசார், பலமுறை பேச்சு வார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.

இதைதொடர்ந்து இன்று அதிகாலை முதல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அகற்றும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வலுக்கட்டாயமாக ஆர்ப்பாட்டக்கார்ர்களை அப்புறப்படுத்துவதால், பரபரப்பும், பதற்றமும் நிலவுகிறது. இதனால், மதுரை, கோவை, தேனி, திண்டுக்கல் உள்பட அனைத்து பகுதிகளும் போர்க்களம் போல் காட்சியளிக்கிறது.

இந்நிலையில், மெரினா கடற்கரையில் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட ஏராளமான இளைஞர்கள் வந்தனர். அவர்களை திருவல்லிக்கேணி அருகே தடை செய்து, தடுத்து நிறுத்திய போலீசார், தடியடி மற்றும் கல்வீச்சு நடத்தி வருகிறது. இதனால், அந்த பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

திருவல்லிக்கேணி பெசன்ட் ரோட்டில் ஏராளமான ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் நின்றிருந்தனர். அவர்கள் மீது போலீசார், கற்களை வீசி விரட்டியடித்தனர். ஆனால், அவர்கள் கலைந்து செல்லாததால், போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியும், கல்வீசி தாக்கியும் காவல்துறையினர் கலைக்க முயன்றனர்.

முதலில் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறையினர், போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளையும் வீசுகின்றனர். அப்பகுதி போர்க்களம் போல காட்சியளிக்கிறது.