Asianet News TamilAsianet News Tamil

அரிசி கடத்தலை தடுக்க முடியாத தமிழக அரசு...! ஆந்திர மாநிலத்தின் அவப்பெயரை பெற்றுள்ளது- ராமதாஸ் விமர்சனம்

ரேசன் அரிசி அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்படுவதை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

Pmk founder Ramdas has demanded that the Tamil Nadu government take action to stop the smuggling of ration rice to Andhra Pradesh
Author
Tamilnadu, First Published May 25, 2022, 10:45 AM IST

ஆந்திராவுக்கு அரிசி கடத்தல்

மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் கடத்தப்படுகின்றன என்றால், பொது வினியோகத் திட்டத்தில் ஏதோ ஓட்டை உள்ளது என்று தான் பொருள். அந்த ஓட்டை அடைக்கப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிலிருந்து நியாயவிலைக் கடை அரிசி மிகப்பெரிய அளவில் ஆந்திர மாநிலத்திற்கு கடத்தப் படுவதாகவும், அதைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தின் இயலாமையை அண்டை மாநில எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டிருப்பது அரசுக்கு அவப்பெயர் ஆகும். தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் இருந்து 7 வழித்தடங்கள் வழியாக ஆந்திரத்திற்கு அரிசி கடத்தி வரப்படுகிறது; ஆந்திரத்தில் உள்ள அரிசி ஆலைகளில் கடத்தல் அரிசி பாலிஷ் போடப்பட்டு சில்லறை விற்பனையில் கிலோ ரூ.40 என்ற விலைக்கு விற்கப்படுகிறது அல்லது கர்நாடகத்திற்கு கடத்திச் செல்லப் படுகிறது; தமிழக & ஆந்திர எல்லையில் உள்ள குப்பம் தொகுதிக்குட்பட்ட 4 காவல் நிலையங்களில் கடந்த 16 மாதங்களில் 13 அரிசிக்கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று சந்திரபாபு நாயுடு அவரது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். தமிழ்நாட்டிலிருந்து ஆந்திரா, கர்நாடகம்  ஆகிய மாநிலங்களுக்கு அரிசி கடத்தப்படுவது காலம் காலமாக நடந்து வருவது தான். ஆனால், தமிழ்நாட்டிலிருந்து நியாயவிலைக் கடை அரிசி தங்கள் மாநிலத்திற்கு கடத்தி வரப்படுவதை தடுக்க வேண்டும் என்று அண்டை மாநிலத்தின் தலைவர் ஒருவரே தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதும் அளவுக்கு இப்போது நிலைமை மோசமாகியுள்ளது.

Pmk founder Ramdas has demanded that the Tamil Nadu government take action to stop the smuggling of ration rice to Andhra Pradesh


தமிழகத்திற்கு அவப்பெயர்

இந்தியாவில் மிகவும் வலிமையான பொது வினியோக கட்டமைப்பு உள்ள மாநிலம் தமிழ்நாடு என்பது  எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு நியாயவிலைக்கடைகளுக்கான அரிசி கடத்தப்படுவதிலும் தமிழ்நாடு தான் முதன்மை மாநிலம் என்பதும் உண்மை ஆகும். தமிழ்நாட்டில் எந்த ஆட்சி நடந்தாலும்  நியாயவிலைக் கடைகளில் இருந்து அரிசி கடத்தப்படுவது மட்டும் தொடர்கதையாக நீடித்துக் கொண்டு தான் இருக்கிறது. இதற்கு அனைத்து நிலையிலும் ஆதரவு உள்ளது என்பது தான் வேதனையான உண்மை.  ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து தினமும் ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இந்தக் கடத்தலுக்கு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அதிகாரிகளும் உடந்தை என்பது அதை விட வலிமையான உண்மை. கடந்த ஏப்ரல் 21&ஆம் தேதி கூட சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் இருந்து கர்நாடகத்திற்கு கடத்திச் செல்லப்பட இருந்த 17 டன் நியாயவிலைக்கடை அரிசியையும், அரிசிக் கடத்தலில் ஈடுபட்ட 6 பேரையும் காவல்துறை கைது செய்தது. அதில் பிடிபட்டவர்களிடம் விசாரித்த போது, நியாயவிலைக்கடைகளுக்கு கிடங்கில் இருந்து சரக்குந்துகள் மூலம் அரிசி மூட்டை அனுப்பப்படும் போது, அவற்றை பாதியில் நிறுத்தி, அதிகாரிகள் உதவியுடன் அரிசி மூட்டைகளை கடத்துவதாக காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.ஒரே இடத்திலிருந்து, ஒரே முறையில் 17 டன் அரிசியைக் கடத்துவதெல்லாம் நுகர்ப்பொருள் துறையின் மேல்மட்ட ஒப்புதல் இல்லாமல் நடக்க வாய்ப்பே இல்லை. வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படும் அரிசி மூட்டைகள் நியாயவிலைக் கடைகளில் இருந்து கடத்திச் செல்லப்படுவதில்லை; நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்குகளில் இருந்து தான் கடத்திச் செல்லப்படுகின்றன என்பதிலிருந்தே இதன் பின்னணியில் வலிமையான வலைப்பின்னல் இருப்பதை புரிந்து கொள்ள முடியும். 

Pmk founder Ramdas has demanded that the Tamil Nadu government take action to stop the smuggling of ration rice to Andhra Pradesh

மாவட்ட எல்லைகளை பலப்படுத்த வேண்டும்

காலம், காலமாக அரிசிக் கடத்தல் நடைபெறும் போதிலும் அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படாததன் நோக்கம் மட்டும் புரியவில்லை. ஏழை மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய அரிசி தமிழ்நாட்டிலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு கடத்தப் படுவதை தடுக்க முடியவில்லை என்பதை  சம்பந்தப்பட்ட துறையின் தோல்வியாகத் தான் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் ரேஷன் அரிசிக் கடத்தலைத் தடுப்பதற்காக டிஜிபி நிலை அதிகாரி ஒருவர் தலைமையில், குடிமைப் பொருட்கள் கடத்தல் தடுப்புப் பிரிவு என்ற தனிப்பிரிவு தமிழக காவல்துறையில் செயல்பட்டு வருகிறது. ஆனால், அந்தப் பிரிவின் கைகள் கட்டப்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது. பெயரளவில் சில கடத்தல்களை தடுக்கும் அந்தப் பிரிவு, பெரும்பான்மையான கடத்தல்களை தடுப்பதில்லை. 10 டன் அரிசிக் கடத்தலை அப்பிரிவு தடுத்து பறிமுதல் செய்ததாக செய்திகள் வெளியானால், 100 டன் அரிசி பிடிபடாமல் பிற மாநிலங்களுக்கு சென்று விட்டது என்பது தான் சொல்லப்படாத செய்தி ஆகும். இது மோசமான அணுகுமுறை ஆகும். இதை தடுக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் நியாயவிலைக் கடையில் அரிசி உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு கைரேகை கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. அதற்குப் பிறகும் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் கடத்தப்படுகின்றன என்றால், பொது வினியோகத் திட்டத்தில் ஏதோ ஓட்டை உள்ளது என்று தான் பொருள். அந்த ஓட்டை அடைக்கப்பட வேண்டும். அதைக் கடந்து ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க மாவட்ட எல்லைகளிலும், மாநில எல்லைகளிலும் கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும். ரேஷன் அரிசிக் கடத்தலை முற்றிலும் தடுக்க வேண்டும். அதன் மூலம் தமிழகத்தில் அப்பாவி மக்களுக்கு வழங்கப்படும் அரிசி கடத்தப்படுகிறது என்ற அவப்பெயரை அரசு போக்க வேண்டும் என ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios