ஒரு மாவட்டக் கல்வி அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், வினாத்தாள் கசிவு தொடர்வதற்கு யார் காரணம்? அடுத்தடுத்து வினாத்தாள் கசிவதால், தமிழக அரசின் தேர்வு முறை மீதே மாணவர்கள் நம்பிக்கை இழந்துவிடக் கூடும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

ஒரு மாவட்டக் கல்வி அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், வினாத்தாள் கசிவு தொடர்வதற்கு யார் காரணம்? அடுத்தடுத்து வினாத்தாள் கசிவதால், தமிழக அரசின் தேர்வு முறை மீதே மாணவர்கள் நம்பிக்கை இழந்துவிடக் கூடும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 10,11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் மே மாதம் இறுதித்தேர்வு நடைபெறவுள்ளது. இதனால் தற்போது பிளஸ்1, பிளஸ் 2 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. நாளை 12 வகுப்பு திருப்புதல் கணித தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில், கணிதத்தேர்விற்கான திருப்புதல் தேர்வு வினாத்தாள் கசிந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஏற்கனவே நடைபெற்ற முதல் திருப்புதல் தேர்விலும் 10, 12 ஆம் வகுப்பு வினாத்தாள்கள் தேர்விற்கு முன்னதாக கசிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியநிலையில் மீண்டும் 2ம் கட்ட திருப்புதல் தேர்வில் வினாத்தாள் கசிந்துள்ளது. இந்நிலையில் புதிய வினாத்தாளை வைத்து 12 ஆம் வகுப்பு கணித தேர்வு நாளை நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் திருப்புதல் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''தமிழகத்தில் நடைபெற்று வரும் 12ம் வகுப்புக்கான இரண்டாம் திருப்புதல் தேர்வில், நாளை நடைபெறவுள்ள கணிதப் பாடத்திற்கான வினாத்தாள் இன்று மதியமே வெளியாகி இருக்கிறது. தேர்வுக்காக தயாரிக்கப்பட்டிருந்த இரு வகை வினாத்தாள்களும் கசிந்ததால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற முதல் திருப்புதல் தேர்வில் அனைத்து பாடங்களுக்கான வினாத்தாள்களும் முன்கூட்டியே வெளியாகி இருந்தன. அதற்காக ஒரு மாவட்டக் கல்வி அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், வினாத்தாள் கசிவு தொடர்வதற்கு யார் காரணம்? அடுத்தடுத்து வினாத்தாள் கசிவதால், தமிழக அரசின் தேர்வு முறை மீதே மாணவர்கள் நம்பிக்கை இழந்துவிடக் கூடும்.

தமிழகத்தில் மருத்துவம் தவிர்த்த பிற படிப்புகளுக்கு 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடப்பதால், இதை அரசு எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. வினாத்தாள் கசிவுக்கு காரணமானவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த மாதம் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், அத்தேர்வுகளுக்கான வினாத்தாள் கசியாமல் இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.'' இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.