Asianet News TamilAsianet News Tamil

காசி தமிழ்ச் சங்கமத்தில் கலந்துகொண்டவர்களின் கடிதங்களுக்கு பிரதமர் மோடி பதில்

காசி தமிழ்ச் சங்கமத்தில் கலந்துகொண்ட அனுபவம் குறித்து கடிதம் எழுதியவர்களுக்கு பிரதமர் மோடி பதில் கடிதங்கள் அனுப்பியுள்ளார்.

PM Modi replies to the letters of those who participated in the Kashi Tamil Sangam
Author
First Published Apr 4, 2023, 12:19 PM IST

2022ஆம் ஆண்டு வாரணாசியில் நடைபெற்ற காசி தமிழ் சங்கமத்தில் கலந்துகொண்ட அனுபவங்கள் குறித்து தமிழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள்  பிரதமருக்கு கடிதங்கள் எழுதியுள்ளனர். அவர்களுக்கு பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் பதில் கடிதங்கள் எழுதியுள்ளார்.

அதில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியின் மூலம் காசியின் கலாச்சாரம் மற்றும் மக்கள் பற்றி நெருக்கமாக அறிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது என்று பிரதமர் மோடி தனது மகிழ்ச்சியை பதிவு செய்துள்ளார். காசியில் தமிழ் மொழியின் அழகும், தமிழகத்தின் செழுமையான கலாச்சாரமும் கொண்டாடப்பட்ட விதம் அற்புதமானது என்று பிரதமர் கூறியுள்ளார்.

காசி தமிழ் சங்கமம் நடத்த பிரதமர் மோடிக்கு எப்படி எண்ணம் வந்தது என வியக்கிறேன்: இளையராஜா

காசிக்கும் தமிழகத்துக்கும் இடையே உள்ள பல நூற்றாண்டுகள் பழமையான உறவைக் குறிப்பிட்டு எழுதியுள்ள பிரதமர், “செழுமையான நாகரிகத்தைக் கொண்ட தமிழக மக்களுடன் காசிக்கு நீண்ட நெடிய தொடர்பு உள்ளது. காசி தமிழ் சங்கமம் அந்த இடத்தின் வரலாற்று நினைவுகளை மீண்டும் எழுப்புகிறது. நமது நாட்டின் பல்வேறு பகுதிகள் எவ்வளவு ஆழமாக இணைக்கப்பட்டுள்ளன என்பதை வலியுறுத்தியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

PM Modi replies to the letters of those who participated in the Kashi Tamil Sangam

அதே நேரத்தில், சுதந்திரத்தின் அமிர்த காலத்தின்போது, வளர்ந்த இந்தியாவை உருவாக்க மக்களின் முயற்சிகள் வலுப்பெற்று வருகின்றன என்று பிரதமர் எழுதினார். "அடுத்த 25 ஆண்டுகளில் அமிர்த காலத்தின்போது வலிமையான மற்றும் தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவை உருவாக்குவதற்கான வழிகளை முழு நாடும் விவாதிக்கும் நேரத்தில், நமது நாட்டின் ஒற்றுமையை ஆழப்படுத்த ஒவ்வொரு முயற்சியும் முக்கியமானது. ஒரு புகழ்பெற்ற நினைவுச்சின்னத்தை உருவாக்க வலுவான அடித்தளம் முக்கியமானது" என்று தெரிவித்துள்ளார்.

பனாராஸ் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தனி இருக்கை!: பிரதமர் மோடி அறிவிப்பு

தமிழக மக்களின் உணர்வுகளைப் பாராட்டிய பிரதமர், தேசத்தின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துவதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்த சங்கமம் தமக்கு உத்வேகம் அளித்ததாகவும் குறிப்பிட்டார்.

2022ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழாவில் தமிழகத்திலிருந்து நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர். ஒரு மாத கலாத்திற்கு நடைபெற்ற நிகழ்ச்சிகளில் தமிழகத்தைச் சேர்ந்த பல அறிஞர்கள் மற்றும் கலைஞர்கள் பங்கேற்றனர். இதற்காக தமிழகத்தில் இருந்து 13 சிறப்பு ரயில்கள் காசிக்கு இயக்கப்பட்டன.

இசைஞானி இளையராஜா காசி தமிழ்ச் சங்கமத்தில் நடத்திய சிறப்பு இசை நிகழ்ச்சி மிகவும் பேசப்பட்ட நிகழ்வாக அமைந்தது. ஈஷா யோகா மையத்தைச் சேர்ந்த சத்குரு ஜக்கி வாசுதேவ், வாழும் கலை அமைப்பைச் சேர்ந்த ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். காசி தமிழச் சங்கமம் நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று திமுகவினர் மத்திய அரசைக் குற்றம்சாட்டினர்.

காசி தமிழ் சங்கமம்: 13 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூல் வெளியீடு

Follow Us:
Download App:
  • android
  • ios