காவிரி விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து ஏப்ரல் 5ம் தேதி நடக்கவிருக்கும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஏற்கனவே அறிவித்திருந்ததை பெட்ரோல் விற்பனையாளர் சங்கம் திரும்பப் பெற்றுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான அவகாசம் முடிந்த நிலையில், மேலாண்மை வாரியம் இன்னும் அமைக்கப்படவில்லை. இதனால் மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் எதிர்க்கட்சிகளும், விவசாய சங்கங்களும் தொடர்ந்து போராடி வருகின்றன. இதனால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று தமிழக அனைத்து வணிக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், மத்திய அரசைக் கண்டித்து மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. இந்த போராட்டத்திற்கு அதிமுக, பாஜக, தேமுதிகவை தவிர அனைத்து கட்சிகளும் ஆதரவளித்துள்ளது. பல்வேறு தொழிற்சங்கங்களும் போராட்டத்தில் கலந்துகொள்வதாக தெரிவித்துள்ளன.

இதுகுறித்து நேற்று பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், காவிரி விவகாரம் தொடர்பாக நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாகவும், தமிழகத்தில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளும் ஏப்ரல் 5ம் தேதி மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், இன்று காலை வெளியான அறிக்கையில், ஏப்ரல் 5ம் தேதி நடக்கவிருக்கும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளப்போவதில்லை என்றும், பெட்ரோல் பங்குகள் வழக்கம் போல செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து நடத்தும் போராட்டத்திற்கு மட்டுமே ஆதரவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.