People who have been ten days without water Road bus strike in the state bus ...

கடலூர்

கடலூரில் பத்து நாள்களாக தண்ணீரின்றி தவித்துவந்த கிராம மக்கள், தண்ணீர் கேட்டு அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது எய்யலூர் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட மேல்புளியம்பட்டு கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

இந்தப் பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக அதேப் பகுதியில் ஆழ்துளை கிணறு ஒன்று அமைக்கப்பட்டது. அதிலிருந்து மின் மோட்டார் மூலம் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு பொதுக் குழாய் மூலமாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில், மின் மோட்டார் பழுதானதால் கடந்த சில நாள்களாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்படவில்லை. இதனால் கடந்த பத்து நாள்களாக இந்தப் பகுதி மக்கள் குடிநீர் விநியோகம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

இதனையடுத்து பழுதான மின் மோட்டாரை சரி செய்ய வேண்டும் என்று கிராம மக்கள் தொடர்புடைய அதிகாரியிடம் பலமுறை புகார் அளித்துள்ளனர். எனினும், இதுவரை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் சினமடைந்த கிராம மக்கள் நேற்று காலை அதே பகுதியில் உள்ள எய்யலூர் பிரதான சாலையில் திரண்டனர். பின்னர், அவர்கள் அந்த வழியாக வந்த ஒரு அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவில் காவல் உதவி ஆய்வாளர் சிவராமன் மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

காவலாளர்களின் பேச்சுவார்த்தையை ஏற்காத கிராம மக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து மின் மோட்டாரை சரிசெய்து தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின்பு தான் சாலை மறியலை கைவிடுவோம் என்று கூறி போராட்டத்தை தொடர்ந்தனர்.

இதனிடையில் இதுபற்றி அறிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் பாலகிருஷ்ணன், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது கிராம மக்கள், தங்கள் பகுதியில் கடந்த பத்து நாள்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் நாங்கள் அருகில் உள்ள கிராமங்களுக்கும், விளை நிலங்களுக்கும் சென்று தண்ணீர் பிடித்து வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.அதனால் எங்களுக்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்" என்று கூறினர்.

அதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் பாலகிருஷ்ணன், "குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கிறேன்" என்று கூறினார்.

இதனையேற்ற கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.