People threatened to close the Alcohol Store liquor sale with Police safety
தருமபுரி
தருமபுரியில் சாராயக் கடையை மூடலனா அடித்து நொறுக்குவோம் என்று மக்கள் மிரட்டல் விடுத்ததால், போலீஸ் பாதுகாப்போடு சாராயக் கடை திறக்கப்பட்டு சாராய விற்பனை அமோகமாக நடந்தது.
தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை அருகே உள்ளது எட்டிமரத்துபட்டி. இங்கு சாராயக் கடை ஒன்று இயங்கி வருகிறது.
இந்தப் பகுதி வழியாக 50 குக்கிராமங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நாள்தோறும் சென்று வருகின்றனர்.
இந்தப் பகுதியில் உள்ள சாராயக் கடையை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள் அச்சத்துடனே கடந்துச் செல்கின்றனர். எனவே, இந்த சாராயக் கடையை மூடக்கோரி கடந்த சில நாள்களுக்கு முன் தர்மபுரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் திரண்டுச் சென்று மனு அளித்தனர். அதன்பிறகும் இந்த சாராயக் கடை மூடப்படவில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த சாராயக் கடைக்கு வந்த சிலர் கடையை மூடக்கோரி மேற்பார்வையாளரை மிரட்டினர். கடையை மூடவில்லை என்றால் அடித்து நொறுக்குவோம், என்றும் எச்சரித்தனர்.
இதுகுறித்து மேற்பார்வையாளர் முருகன் அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து எட்டிமரத்துபட்டியில் உள்ள சாராயக் கடைக்கு காவலர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தற்போது காவலர் பாதுகாப்புடன் அங்கு சாராய விற்பனை அமோகமாக நடக்கிறது.
இதுதொடர்பாக அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண்கள் கூறியது, “எட்டிமரத்துபட்டியில் உள்ள சாராயக் கடையை மூட நடவடிக்கை எடுக்காவிட்டால் பெண்கள், பள்ளி கல்லூரி மாணவிகள் அங்கு திரண்டு அந்த சாராயக் கடையை நிரந்தரமாக மூடும்வரை தொடர் அறப்போராட்டம் நடத்துவோம்” என்று தெரிவித்தனர்.
