காரியாபட்டி,
காரியாப்பட்டியில் முறையாக குடிநீர் கிடைக்கும் என்று காத்திருந்து ஏமாந்த பொதுமக்கள், காலிக்குடங்களுடன் குடிநீர் கேட்டு போராட்டம் நடத்தினர்.
காரியாபட்டி அருகே உள்ள தோணுகாலில் மூன்று ஆழ்துளை குழாய்கள் மூலம் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.
இவ்வாறு இருக்கையில், இங்குள்ள இரண்டு மின் மோட்டார்கள் பழுதடைந்தன. இதனால் கடந்த சில நாள்களாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை.
தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் வரும் குடிநீரும் முறையாக கிடைக்கவில்லை.
இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். நீரின்றி தவிக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டார்கள். இன்று வரும், நாளை வரும் என்று காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றத்தை மட்டுமே கண்டனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதையடுத்து வெள்ளிக்கிழமை அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் காலிக்குடங்களுடன் குடிநீர் கேட்டு போராட்டம் நடத்தினர்.
தகவல் கிடைத்ததும் காரியாப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் இரவீந்திரன் மற்றும் அதிகாரிகள் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பழுதடைந்த மோட்டார்களை உடனடியாக சரிசெய்து தடையின்றி குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்துவிட்டுச் சென்றனர்.
அவர்கள் பேச்சை நம்பி பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்..
