குடிநீர் கேட்டு பொதுமக்கள் போராட்டம்; சாலையை மறித்து பேருந்தை சிறைப்பிடித்ததால் பரபரப்பு..
தருமபுரியில் தண்னீர் கேட்டு பொதுமக்கள், பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். வெற்றுக் குடங்களை சாலையின் குறுக்கே போட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது..
தருமபுரி
தருமபுரியில் தண்னீர் கேட்டு பொதுமக்கள், பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். வெற்றுக் குடங்களை சாலையின் குறுக்கே போட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது..
தருமபுரி மாவட்டம், கடத்தூர், வீரகௌண்டனூர் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் குடிநீரின்றி கடும் அவதி அடைந்து வருகின்றனர். தண்ணீருக்காக இப்பகுதி மக்கள் பக்கத்தில் இருக்கும் விவசாயக் கிணறுகளுக்குச் சென்று தண்ணீர் கொண்டுவருகின்றனர்.
தண்ணீரை காசு கொடுத்தும் சிலர் வாங்குகின்றனர். ஆனால், அதுவும் போதுமானதாக இல்லை. குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் பெரும் அவதி அடைதுள்ளனர். எனவே, இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கடத்தூர் - தாளநத்தம் சாலையில் குடிநீர் கேட்டு வெற்றுக் குடங்களுடன் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அந்த வழியாக வந்த தனியார் பேருந்தை நிறுத்திச் சிறைப்பிடித்தனர். இதுகுறித்து தகவலறிந்த கடத்தூர் காவல் உதவி ஆய்வாளர் மதி அழகன், வருவாய் ஆய்வாளர் விஜி மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். "குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் சிறைப்பிடித்த பேருந்தை விடுவித்தனர். போராட்டத்தையும் கைவிட்டு அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.
தண்னீர் கேட்டு பொதுமக்கள் பேருந்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் இங்கு அரை மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.