குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக கூறி, அதிமுக எம்எல்ஏ நட்ராஜ் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், மயிலாப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில், முன்னாள் ஏடிஜிபி நட்ராஜ், சென்னை மயிலாப்பூர் தொகுதியிலு அதிமுக சார்பில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார்.

தமிழகத்தில் தற்போது தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடி வருகிறது. இதுபற்றி எதிர்க்கட்சிகள் சரமாரி குற்றஞ்சாட்டி வருகின்றன. மேலும், வரும் மழை காலங்களில் தண்ணீர் தேக்கி வைக்க எதிர்க்கட்சி சார்பில் குளம், ஏரி ஆகியவை தூர் வாரி சீரமைக்கப்படுகிறது.

ஆனால், தமிழக அரசு சார்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர். இதற்கிடையில் சென்னை மற்றும் பல இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் மழைநீர் ஆறாக ஓடுகிறது.

இதற்கிடையில், சென்னை மாநகராட்சி சார்பில், கால்வாய்கள் சரிவர தூர்வாராமல் விட்டனர். பாதாள சாக்கடை அடைப்புகளையும் சீர் செய்யவில்லை.

இதைதொடர்ந்து, நேற்று சென்னை நகரின் பல இடங்களில் மழை பெய்தது. இதில் மயிலாப்பூர், மந்தைவெளி, திருவான்மியூர் உள்பட பல இடங்களில் பலத்த மழை பெய்தது. பல இடங்களில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து ஓடியது.

இதையொட்டி சென்னை மயிலாப்பூர் பகுதியில் நேற்று பெய்த கன மழையால், சாலையில் ஆங்காங்கே குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளது. இதில், கழிவுநீர் கலந்துள்ளதால், அவ்வழியாக நடந்து செல்லும் பள்ளி மாணவ, மாணவிகள், முதியோர், பெண்கள் என பலரும் பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், சென்னை மயிலாப்பூர் வி.சி. கார்டன் பகுதி மக்கள் குடிநீரில் கழிவு நீர் கலப்பதாக கூறி இன்று காலை எம்எல்ஏ நட்ராஜ் வீட்டுக்கு சென்று புகார் செய்தனர். அவர்களிடம் அவர் சமரசம் பேசினார். ஆனால், அதை பொதுமக்கள் ஏற்கவில்லை. அவரது வீட்டை முற்றுகையிட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது, பொதுமக்கள், கடந்த ஒரு ஆண்டுக்கு முன் சாலையில் குடிநீருக்காக தோண்டப்பட்ட பள்ளம் மூடவில்லை. மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, குடிநீர் வாரியம் மீது குறை சொல்கிறார்கள். குடிநீர் வாரியத்தை கேட்டால், ஒப்பந்ததாரர்கள் வேலையை முடிக்கவில்லை என்கிறார்கள்.

இதுபோல் அவர்களின போட்டியால், எந்த வேலையும் முடியவில்லை. இதனால், குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருகிறது. ஏற்கனவே டெங்கு காய்ச்சலால் பலர் இறக்கின்றனர். ஒரு ஆண்டாக சாலையை மூடாமல் வைத்துள்ளனர்.

இந்த பள்ளத்தில் தினமும் ஒருவர் விழுந்து காயமடைகின்றனர். கடந்த வாரம் இந்த பள்ளத்தில் விழுந்த ஒரு பெண்ணுக்கு, இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டது. நேற்று காலை விழுந்த ஒருவருக்கு கால் எலும்பு முறிந்தது.

இதுபோல் நாளுக்கு நாள் நாங்கள் அவதியடைந்து வருகிறோம். உடனடியாக இதை சீரமைக்காவிட்டால், பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்றனர்.