People of Ramanathapuram fear

கடல் சீற்றம் காரணமாக கன்னியாகுமரி கடற்கரை கிராமங்களில் கடல்நீர் புகுந்துள்ள நிலையில் ராமநாதபுரம் கடற்பகுதியில் சுமார் ஒரு கிலோ மீட்டருக்கு கடல் உள்வாங்கி உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

கடலில் ஏற்பட்டுள்ள தொலைதூர சலனங்கள் மற்றும் இயற்கை மாற்றத்தால் கடல் சீற்றத்துடன் காணப்படும என்று நேற்று முன்தினம் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். அதாவது நேற்றும் இன்றும் கடல் அலையின் சீற்றம் அதிகரிக்கும் என்று தெரிவித்திருந்தார். பலத்த காற்று, கடல் சீற்றத்தால் 11 அடி உயரத்துக்கு அலைகள் எழும் என்றும் மீனவர்களும் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.

எனவே, மீனவர்களும், பொதுமக்களும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. இந்த எச்சரிக்கையை அடுத்து, மீனவர்களும், படகு மீனவர்களும்
கடலுக்குள் செல்லவில்லை. 

கன்னியாகுமரியில் மார்த்தாண்டம் அருகே கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. அலையின் சீற்றத்தால், 18 கிராமங்களுக்குள் கடல் நீர் புகுந்துள்ளது. சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு கடல் நீர் புகுந்துள்ளது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. 

ராட்சத அலைகள் தாக்கியதில் 150 வீடுகள் சேதமடைந்துள்ளன. மண்டைக்காடு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு சுவர்களும் ராட்சத அலைகளால் சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட மக்கள் வேறிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன. தற்காலிகமாக 6 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம, திருப்பாலைக்குடியில் ஒரு கிலோ மீட்டருக்குமேல் கடல் உள்வாங்கிக் காணப்படுகிறது. இதனால் மக்கள் அச்சத்தில்ஆழ்ந்துள்ளனர். அடுத்து என்ன நிகழுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

ராமேஸ்வரம் பகுதி தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடலில் குளிக்க வேண்டாம் என்ற அறிவுறுத்தலையும் மீறி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் சிலர் நீராட முயன்றனர். அவர்களை கடலோர பாதுகாப்பு குழுவினர் பாதுகாப்பாக வெளியேற்றினர்.