People go to a neighboring village like water For those unable to walk for a jug of water and Rs 10
விருதுநகர்
விருதுநகரில், குடிநீருக்காக 3 கி.மீ. தொலைவு சென்று மக்கள் பக்கத்து கிராமத்தில் தண்ணீர் பிடிக்கின்றனர். அவ்வளவு தொலைவு நடக்க முடியாதவர்கள் ஒரு குடம் தண்ணீரை ரூ.10 கொடுத்து வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
பருவமழை பொய்த்ததால் விருதுநகர் மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. நகரம் முதல் கிராமங்கள் வரை அனைத்து இடத்திலும் குடிநீர் தட்டுப்பாடு பெரும் பிரச்சனையாக உள்ளது.
இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண அதிகாரிகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபடுவது வழக்கமான ஒரு நிகழ்வாக மாறிவிட்டது. இருந்தும், எந்தவித நடவடிக்கையும் எடுத்தபாடில்லை என்பது மக்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.
இந்த நிலையில், காரியாபட்டியை அடுத்துள்ள நரிக்குடி ஒன்றியத்திற்கு உள்பட்ட உடையசேர்வைக்காரன்பட்டி கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த கிராமத்திற்கு குண்டாற்றின் கரை ஓரத்தில் கிணறு அமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது நிலவும் கடும் வறட்சியினால் குடிநீர் வழங்கிய கிணறுகளும் பாதிக்கப்பட்டு வறண்டு கிடக்கின்றன.
இதனால் சுமார் 3 கி.மீ, தொலைவுச் சென்று பக்கத்து கிராமத்தில் இருந்து தண்ணீர் பிடித்து வருகின்றனர். சுமந்து வர இயலாததால் தள்ளுவண்டிகளில் குடங்களை வைத்து தண்ணீர் கொண்டு வருகின்றனர்.
அவ்வளவு தொலைவு சென்று குடிநீர் பிடிக்க இயலாதவர்கள் ஒரு குடம் தண்ணீர் ரூ.10 என விலை கொடுத்து வாங்கும் அவல நிலையும் உள்ளது.
இந்தக் குடிநீர் பிரச்சனையை சமாளிக்க குண்டாற்றின் கரையில் ஆழ்குழாய் கிணறு அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
