தருமபுரி

தருமபுரியில் அமைக்கப்பட்ட புதிய சாராயக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள், கடைக்கு முன் சமைத்து சாப்பிட்டு ஆறாவது வது நாளாக போராட்டத்தை தொடர்ந்தனர்.

தருமபுரி மாவட்டம், அருகே உள்ள மொன்னையன் கொட்டாய் பகுதியில் புதிதாக சாராயக் கடை ஒன்று அமைக்கப்பட்டது. இதற்கு சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் இந்த சாராயக் கடை கடந்த ஆறு நாள்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.

சாராயக் கடை திறக்கப்பட்ட நாளிலேயே அங்குத் திரண்ட மக்கள் அந்த சாராயக் கடையை உடனடியாக மூட வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து தினமும் அங்கு திரண்ட மக்கள் சாராயக் கடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று 6-வது நாளாக சாராயக் கடை முன்பு திரண்ட மக்கள் சாராயக் கடைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒப்பாரி வைத்து கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

நேற்று மதியம் சாராயக் கடை முன்பு உணவு சமைத்தனர். பெண்கள், சிறுவர், சிறுமிகள் என அனைவரும் அதே பகுதியில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டனர்.

இதுதொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறியது:

“இங்கு சாராயக் கடை செயல்பட்டால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும், பெண்கள், மாணவ, மாணவிகள் பாதிப்பிற்கு உள்ளாவர். சாராயக் கடை அமைந்துள்ள சாலை தேசிய நெடுஞ்சாலையுடன் இணைவதால் இந்த வழியாக பெண்கள் நடமாட முடியாத நிலை ஏற்படும்.

எனவே, இந்த சாராயக் கடையை உடனடியாக மூட வேண்டும். சாராயக் கடையை மூடும் வரை போராட்டம் தொடரும்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.