மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிக்காக மத்திய அரசு தமிழகத்திற்கு ரூ.6230.45 கோடி கேட்டிருந்த நிலையில் ரூ.352.85 கோடி மட்டுமே வழங்கியுள்ளது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிக்காக மத்திய அரசு தமிழகத்திற்கு ரூ.6230.45 கோடி கேட்டிருந்த நிலையில் ரூ.352.85 கோடி மட்டுமே வழங்கியுள்ளது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரை பெய்த வடகிழக்கு பருவமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. பின்னர் வங்கக் கடலில் உருவான மற்றொரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி 2021 நவம்பர் 19 ஆம் தேதி தமிழகக் கரையைக் கடந்தது. அப்போது விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்தது. மேலும், அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கனமழையால் பாலாறு, தென்பெண்ணையாறு, கொள்ளிடம், கொசஸ்தலை ஆறு ஆகிய ஆறுகளில் அதிக அளவு தண்ணீர் வெளியேறியதால், பல கிராமங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கரையோர கிராமங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது.

நவம்பர் 26 முதல் டிசம்பர் 1 வரை மாநிலத்தின் பல பகுதிகளில் மழை பெய்தது. இதன் காரணமாக செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருநெல்வேலி, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருவண்ணாபுரம், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் விவசாயம், சாலைகள், மின்சாரம், வீடுகள் போன்றவற்றுக்கு பெரும் சேதம் ஏற்பட்டது. கனமழை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட பெரிய அளவிலான சேதங்களைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு, மத்திய அரசிடம் ரூ.6,230.45 கோடி நிதியுதவி கோரியது. இதை அடுத்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, கன்னியாகுமரி, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கடந்த நவம்பர் 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை மத்தியக் குழுவினர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று சேத விபரங்களை நேரில் மதிப்பீடு செய்தனர்.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் கடந்தாண்டு பெய்த வடகிழக்கு பருவமழையின் போது ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரணம் மற்றும் மறுசீரமைப்புக்காக தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.352.85 கோடியை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் சார்பில் மத்திய அரசிடம் கோரப்பட்ட மொத்த தொகையான ரூ.6,230.45 கோடியில் 5.66 சதவீதம் மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. இதனால் மழையால் ஏற்பட்ட சேதங்களுக்கான முழு நிவாரண உதவிகளையும் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு குறைவான நிதி வழங்கி உள்ளதால், தமிழக மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
