தூத்துக்குடி

தூத்துக்குடியில் நடந்த குழு தகராறில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய கோரி, தென்பாகம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், இனிகோ நகர் பகுதியில் குடிநீர் பிடிப்பதில் இரு தரப்பினருக்கு இடையே குழு மோதல் ஏற்பட்டது. இதில் அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

இந்தச் சம்பவம் குறித்து தூத்துக்குடி தென்பாகம் காவலாளர்கள், இருதரப்பினரைச் சேர்ந்த 7 பேர் மீது வழக்குப்பதிந்தனர். அதில் ஒரு தரப்பினரைச் சேர்ந்த இருவரை காவலாளர்கள் கைது செய்தனர்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்டவர்களின் ஆதரவாக இனிகோ நகரைச் சேர்ந்த மக்கள், நேற்று மாலையில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்திற்கு வந்தனர்.

அவர்கள், “உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்” என்று கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து காவலாளர்கள் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் உடன்படாத மக்கள் காவல் நிலையம் முன்பு அமர்ந்து முழக்கங்கள் எழுப்பியவாறு இரவு வரை போராட்டம் நடத்தினர்.

அந்தப் பகுதியில் போராட்டம் தொடர்வதால் பரபரப்புடன் காணப்படுகிறது.