கோவை

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் சாராயக் கடைகளின் பாதுகாப்பை நீங்களே பார்த்து கொள்ளுங்கள் என்று அதன் சாவிகளை ஆட்சியரிடம் சாராயக் கடை ஊழியர்கள் ஒப்படைத்தனர்.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி கோவை மாவட்டத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையோரம் இருந்த 180 டாஸ்மாக் சாராயக் கடைகள் மூடப்பட்டன. அந்த கடைகளில் பணியாற்றிய ஊழியர்கள் 100 பேர் மூடப்பட்ட சாராயக் கடைகளின் சாவியை ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க வந்தனர்.

அவர்கள், மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்க (சி.ஐ,டி.யு.) தலைவர் மூர்த்தி தலைமையில் ஆட்சியர் ஹரிகரனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

பின்னர் சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் கூறியது:

“மூடப்பட்ட டாஸ்மாக் சாராயக் கடைகளில் மதுபாட்டில்கள் மற்றும் தளவாட பொருட்கள் எடுக்கப்படாமல் அப்படியே உள்ளன. இலட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் உள்ள கடைகளில் ஆள் நடமாட்டம் உள்ள போதே திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன. தற்போது மூடப்பட்ட நிலையில் கடைகளுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போதும் அந்த கடைகளின் சாவிகள் கடை ஊழியர்களின் பொறுப்பில் தான் உள்ளது. டாஸ்மாக் நிர்வாகமோ கடை ஊழியர்கள் தான் கடையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று கூறுகிறது. இதனால் ஏற்படும் இழப்புகளுக்கு கடை ஊழியர்கள் பொறுப்பேற்கும் நிலை உருவாகியுள்ளது.

எனவே, “ஆட்சியர் இந்த பிரச்சனையில் தலையிட்டு மூடப்பட்ட கடைகளில் உள்ள மதுபாட்டில்கள் மற்றும் தளவாட பொருட்களை டாஸ்மாக் நிர்வாகமே திரும்ப பெற்றுக்கொள்ள உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று கோரியுள்ளோம். இதற்காக கடைகளின் சாவிகளை ஆட்சியரிடம் ஒப்படைப்பதற்காக வந்தோம்” என்று அவர்கள் கூறினர்.