Asianet News TamilAsianet News Tamil

பேருந்து கண்ணாடியை உடைத்த குடிகாரனை வெளுத்து வாங்கிய பயணிகள்... தருமஅடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு...

Passengers attacked drunker who break the bus glasses
Passengers attacked drunker who break the bus glasses
Author
First Published Jun 4, 2018, 7:03 AM IST


திருப்பூர்

திருப்பூரில் போதையில் அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த குடிகாரனை, பொதுமக்கள் மற்றும் பயணிகள் தரும அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

திருப்பூர் 60 அடி சாலையில் நேற்று குடித்துவிட்டு அதீத போதையில் இருந்தவர், அந்த வழியாக சென்ற பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்டார். இதனைப் பார்த்து எரிச்சல் அடைந்த அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அந்த குடிகாரனிடம் இதுகுறித்து கேட்டனர்.

அதற்கு அந்த குடிகாரன், பொதுமக்களை அசிங்கமாக திட்டியதுடன் அவர்களிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டு தரக்குறைவாக நடந்து கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அந்த குடிகாரனை அடித்து உதைத்தனர்.

இதனையடுத்து அந்த குடிகாரன் பொதுமக்கள் மீது கற்களை வீசினார். அப்போது அந்த வழியாக தேனி மாவட்டத்தில் இருந்து திருப்பூர் நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்துள்ளது. ஆத்திரத்தில் இருந்த குடிகாரன் அந்த பேருந்தின் மீதும் கற்களை வீசியுள்ளார். 

அதில், ஒரு கல் பேருந்தின் முன்பக்க கண்ணாடி மீது விழுந்ததில் கண்ணாடி உடைந்து சுக்கு நூறாக நொறுங்கியது. இதனால் பேருந்தின் உள்ளே இருந்த பயணிகள் அலறினர்.

இதனையடுத்து பேருந்தின் ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தினார். குடிகாரனின் இந்த செயலால் கோபம் அடைந்த அந்த பகுதியில் உள்ள பொதுமக்களும், பேருந்தில் இருந்த பயணிகளும் அந்த குடிகாரனை பிடித்து மீண்டும் அடித்து துவைத்தனர். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து உடனடியாக திருப்பூர் வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவலாளர்கள் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட அந்த குடிகாரனை பொதுமக்களிடம் இருந்து மீட்டனர். 

பின்னர் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அந்த ஆசாமி மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கணேசன் (41) என்பதும், இவர் திருப்பூரில் 60 சாலையில் உள்ள ஒரு நிறுவனத்தில் வெல்டிங் வேலைக்காக வந்ததும் தெரிந்தது. 

மேலும், நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக குடி போதையில் இருந்த கணேசன் சாலையில் சென்ற பொதுமக்களுடன் தகராறில் ஈடுபட்டதும், பேருந்து மீது கல் வீசி கண்ணாடியை உடைத்ததும் தெரியவந்தது. 

இதுகுறித்த புகாரின்பேரில் காவலாளர்கள் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios