திருவள்ளூர் மாவட்டம் மேல்மணம்பேடு ஊராட்சிமன்ற தலைவர் மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

மேல்மணம்பேடு ஊராட்சிமன்ற தலைவராக இருந்தவர் தங்கராஜ். தினமும் தங்கராஜ், காலை வேளையில் நடைபயிற்சி செல்வது வழக்கம்.

இந்நிலையில், நேற்று காலை தங்கராஜ் வழக்கம்போல், நடைபயிற்சி சென்றார். சுமார் 6.30 மணியளவில் வெள்ளவேடு பகுதியில் இருந்து பூந்தமல்லி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது, பைக்கில் வந்த 5 பேர், அவரை வழிமறித்தனர். பின்னர், மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்தனர். இதை பார்த்ததும் தங்கராஜ், அங்கிருந்து அலறியடித்து கொண்டு தலை தெறிக்க ஓடினார். ஆனால், மர்மநபர்கள், அவரை விரட்டி சென்று, சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.

உடல் முழுவதும் பலத்த வெட்டு விழுந்த அவர், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். அவர் இறந்ததை உறுதி செய்தபின்னர், மர்மநபர்கள், அங்கிருந்து சாவகாசமாக பைக்கில் புறப்பட்டு சென்றனர்.

தகவலறிந்து வெள்ளவேடு போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதற்கிடையில், ஊராட்சி மன்ற தலைவர் தங்கராஜை கொலை செய்த மர்மநபர்களை கைது செய்ய வலியுறுத்தி, அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையறிந்ததும் போலீசார், அங்கு சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரசம் பேசினர். பின்னர், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம் என உறுதியளித்தனர். இதயைடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

திருவள்ளூரில் இருந்து சென்னை செல்லும் பூந்தமல்லி சாலையில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன், திருத்தணி அதிமுக கவுன்சிலர் ஆறுமுகம் வெட்டி படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.