மதங்களில் வெளிச்சம் இருந்தாலும் அவற்றை பரப்ப உருவெடுக்கும் மடங்களின் சில அறைகள் இருள் கவ்வியதாகவும், மர்மங்கள் நிறைந்ததாகவும் இருப்பது சாபக்கேடு. இது எல்லா மதங்களுக்கும் பொதுவான விமர்சனம்தான்.

காஞ்சி சங்கர  மடம் ஒன்றும் அதற்கு விதி விலக்கல்ல! இன்று வைகுண்ட பிராப்தி அடைந்திருக்கும் பெரியவா ஜெயேந்திரரும் அதற்கு விதிவிலக்கல்ல.

தஞ்சாவூர் மாவட்டம் ‘இருள்நீக்கி’ கிராமம்தான் ஜெயேந்திரரின் சொந்த ஊர். அஞ்ஞான இருளை வைணவம் வழியே நீக்கிட பெரியவா அவதாராம் எடுத்த ஜெயேந்திரரின் வாழ்விலும் சில நீங்கா இருள்கள் சூழ்ந்ததுதான் அதிர்ச்சியின் உச்சம்.

காஞ்சி சங்கரமடத்தில் பணிபுரிந்த சங்கர்ராமன் என்பவரின் கொலை வழக்கின் நீட்சியாக 2004-ல் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டார். அந்த கைதின் நீட்சியாக ஜெயேந்திரர் பற்றிய தனிமனித விமர்சனங்கள் ’சென்சேஷனல் பிரியர்களுக்கு’ அவலில் நெய் ஊற்றி பிசைந்து பரிமாறப்பட்டது போல் விருந்தளித்தன.

இந்த தேசத்தில் மிக குரூரமாக தனி மனித விமர்சனத்துக்கு ஆளாக்கப்பட்ட மடாதிபதிகளில் ஜெயேந்திரர் மிக முக்கியமானவர். அவரின் தோற்றத்தில் துவங்கி செயல்பாடு வரை அத்தனையும் பத்திரிக்கை மற்றும் புலனாய்வு புத்தகங்களில் கதறக் கதற கடைவிரிக்கப்பட்டது.

ஆனாலும் காஞ்சியை ‘கண்கண்ட சொர்க்கம்’ என வர்ணித்து வணங்கும் பக்தாள்களுக்கு அவர் மீது பெரிய அளவில் அதிருப்தி எழவில்லை. அவரை உள்ளம் உருக க்ஷேவித்தாலும் கூட, ஒரு வாக்கியத்தை மட்டும் அவர்கள் உச்சரிக்க தவறவில்லை.

அது...’மகா பெரியவா சந்திரசேகேந்திரர் உருவாக்கிண்டு போயிருந்த மடத்தின் மடிகளை பெரியவா கொஞ்சம் அசைச்சுத்தான் பார்த்துண்டா!’ என்பதுதான்.

அது உண்மையும் கூட!