palaru flood...2 persons killed

வாணியம்பாடியை அடுத்த ஆம்பூர் அருகே தரைப்பாலத்தின் மீது 4 அடி உயரத்துக்கு பாலாற்ற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் 15 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் – ஆந்திரா இடையேயும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக அணையில் நீர் திறப்பு, ஆந்திர மாநிலம் பாலாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வேலூர் பாலாற்றில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும் ஆந்திராவில் உள்ள 22 தடுப்பணைகளிலும் தண்ணீர் நிரம்பி வழிவதால் தமிழக எல்லையான வேலூர் மாவட்டம் புல்லூர் அணைக்கு பாலாற்று நீர் வந்து கொண்டிருக்கிறது.

இதனால் ஆம்பூரை சுற்றியுள்ள ஏரிகள் நிரம்பி வருகின்றன. மேலும் நிலத்தடி நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.

பேர்ணாம்பட்டு மலட்டாற்று பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக நரியம்பட்டு தரைப்பாலத்தை வெள்ளநீர் மூழ்கடித்து செல்கிறது. இதனால் நரியம்பட்டு பகுதிக்கு போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இதேபோல, பாலாற்று வெள்ளமும், மலட்டாற்று வெள்ளமும் ஒன்றாக சேரும் பச்சகுப்பம் பகுதியில் உள்ள தரைப்பாலத்தின் மேல் சுமார் 4 அடி உயரத்துக்கு வெள்ளநீர் செல்கிறது.

தரைப்பாலத்தில் உள்ள பாதுகாப்பு கம்பிகள் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் அதிகமாக செல்வதால், காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்துக்காகத் தோண்டப்பட்ட பகுதிகள் சேதமடைந்துள்ளன. இதனால் பொதுப் பணித் துறை அதிகாரிகள் அங்கு மணல் மூட்டைகளை அடுக்கி தரைப்பாலத்தைப் பாதுகாத்து வருகின்றனர்.

வெள்ளப் பெருக்கு காரணமாக பச்சகுப்பம், நரியம்பட்டு தரைப்பாலத்தில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் அழிஞ்சிகுப்பம், ராஜக்கல், எம்.வி.குப்பம், ரெட்டிமாங்குப்பம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

 ஆம்பூரில் இருந்து பச்சகுப்பம், நரியம்பட்டு வழியாகச் செல்லும் பேருந்துகள் மாதனூர், பேர்ணாம்பட்டு வழியாக குடியாத்தம் சென்று வருகின்றன. இதனால், கிராம மக்கள் மிகவும் அவதி அடைந்துள்ளனர். 

மேலும் பாலாற்றின் நீரின் வரத்து அதிகரிக்கும் என்பதால் பொதுமக்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என வருவாய்த் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், வாணியம்பாடி அருகே ஆந்திர எல்லையான வெலதிகாமணிபெண்டாவில் கனமழையால் தரைப்பாலம் உடைந்து விபத்துக்குள்ளானது. பாலத்தின் மேல் சென்ற வேன் மற்றும் இருசக்கர வாகனங்கள் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டு 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். 

இதே போல் ஆம்பூர் அருகே மின்னூர் ஊராட்சியில், குப்பைகளைக் கொட்டுவதற்காக பாலாற்று பகுதிக்கு நேற்று பணியாளர்களுடன் சென்ற மாட்டு வண்டி, வெள்ளத்தில் சிக்கியது. அதைப் பார்த்த அப்பகுதி மக்கள் விரைந்து சென்று மாட்டையும், பணியாளர்களையும் மீட்டனர்.