மாணவர்களின் போராட்டம் : தமிழகத்தை வஞ்சிப்போருக்கு எதிரானது - குமுறுகிறார் பழ.நெடுமாறன்
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு விதிக்கப்பட்டு இருந்த தடை 3-வது ஆண்டாக இந்த ஆண்டும் தொடர்ந்தது.
இதையடுத்து, மாணவர்கள், இளைஞர்கள் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தியே தீர வேண்டும் என்று தீர்மானம் செய்து, தன்னெழுச்சியாக திரண்டு அறவழிப்போராட்டம் நடத்தினர்.
கடந்த 5 நாட்களாக மாநிலம் முழுவதும் இளைஞர்களின் போராட்டம் காட்டுத்தீயாய் பரவியது.
இதையடுத்து, தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மத்திய அரசுடன் அவசர, அவசரமாக ஆலோசனை செய்து, மத்திய சுற்றுச்சூழல், சட்ட அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் ஓப்புதல் பெற்று அவசரச் சட்டத்தைத் தயார் செய்தார்.
அதன்பின், குடியரசுத்தலைவர் ஒப்புதலைப் பெற்றபின், ஆளுநர் வித்யாசாகர் ராவ்அவசரச்சட்டத்தை பிறப்பித்தார்.
ஆனால் ஜல்லிக்கட்டு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படாமல் ஜல்லிக்கட்டு நடத்தப்போவதில்லை என போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனிடையே, தமிழகத்தில் மாணவர்களின் போராட்டம் ஜல்லிக்கட்டுக்கு மட்டுமல்ல, காவேரி, முல்லைப் பெரியார் விவகாரத்தில் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு எதிரானது என்று தமிழர் தேசிய அமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் பேசிய அவர், ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக மாணவர்கள் பெரும் புரட்சியை நடத்தி இருப்பதாகக் குறிப்பிட்டார்.
