ஆச்சரியப்படுத்தும் அரசியல் நாகரீகம்… தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி நிகழ்ச்சியில் ஒன்றாக பங்கேற்ற ஓபிஎஸ், ஸ்டாலின்…
எலியும்,பூனையும் என்று சொல்வார்களே…அதற்கு உதாரணமாக தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக கட்சிகளை சொல்லலாம்.. எந்த ஒரு தமிழக நலம் சார்ந்த பிரச்சனைகள் என்றாலும் கூட இவ்விருகட்சிகளும் நேர் எதிராகவே செயல்படும்.
டெல்லியில் காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் எதிதெதிராக செயல்பட்டாலும், அவர்களிடையே எப்பொழுதும் அரசியல் நாகரிகம் மிளிர்ந்து வரும், இது போன்ற ஒரு சூழ்நிலை தமிழகத்தில் இதுவரை இல்லாமல் இருந்த நிலையில், தற்போது அதற்கான காலம் கனிந்து வந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் தொடர்ந்து மரணமடைந்தபோது,முதலமைச்சர் ஓபிஎஸ் ஐ எதிர்க்ட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரடியாக சந்தித்து மனு அளித்ததோடு, இப்பிரச்சனை தொடர்பாக திமுக அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என உறுதியளித்தார்.
சட்டப்பேரவையில் ஓபிஎஸ்ம், ஸ்டாலினும் சில பிரச்சனைகளில் ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொண்டது தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை காணாத ஒரு நிகழ்வாக கருதப்பட்டது.
ஜல்லிக்கட்டுக்காக அவசரச் சட்டம் பேரவையில் கொண்டுவரப்பட்டபோது அதனையும் ஸ்டாலின் பாராட்டி பேசினார்.
அண்மையில் சட்டப்பேரவை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஓபிஎஸ் ம், ஸ்டாலினும் ஒரே நேரத்தில் வந்தபோது ஒருவருக்கொருவர் வழிவிட்டு தங்கள் அரசியல் நாகரீகத்தை வெளிப்படுத்தினர்.
இதன் உச்சகட்டமாக நேற்று சட்டப்பேரவையில் நடைபெற்ற நிகழ்ச்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
தலைமை செயலகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்க ஓபிஎஸ் தலைமை செயலகம் பின்புறம் உள்ள ராணுவ மைதானத்துக்கு சென்றனர்.
அவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக எம்எல்ஏ.க்களும் சென்றனர்.
காங்கிரஸ் எம்எல்ஏ.க்களும் அவர்களை பின் தொடர்ந்து சென்றனர். உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்கள் அனைவரும் ஒருங்கே கலந்து கொண்டனர். ஒன்றாக உறுதிமொழி எடுத்தனர்.
ஓபிஎஸ் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி உருவப்படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தி விட்டு தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை வாசித்தார்.

அப்போது அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக உறுப்பினர்கள் , அரசு உயர் அதிகாரிகள் அனைவரும் அதை திரும்ப சொல்லி உறுதி ஏற்றனர்.

வழக்கமாக தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் ஆளும் கட்சி உறுப்பினர்களும், எதிர்கட்சி உறுப்பினர்களும் ஒன்றாக சேர்ந்து கலந்து கொள்ள மாட்டார்கள்.
ஆனால் சட்டசபை வரலாற்றில் இன்று முதன் முதலாக மதலமைச்சர் ஓபிஎஸ் தலைமையில் நடந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக. எம்எல்ஏ.க்கள் அனைவரும் பங்கேற்றனர்.
இது தமிழக அரசியலில் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் கடைபிடிக்கும் இந்த நாகரீகம் அனைவரின் பாராட்டுதலையும் பெற்றுள்ளது.
தமிழகத்தில் அரசியல் கட்சிகளிடையே தோன்றியுள்ள இந் புதிய அணுகுமுறை தொடர வேண்டும் என்பதே பொது மக்களின் விருப்பமாக உள்ளது.
