குடிசைப் பகுதியற்ற நகரங்களை உருவாக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் 2018ஆம் ஆண்டுக்கான மாநாடு சென்னையில் நேற்று துவங்கியது. மாநாட்டைத் துவக்கிவைத்து  பேசிய  துணை முதல்வர் பன்னீர்செல்வம், “உணவும், உடையும் எவ்வளவு அவசியமோ, அதுபோல உறைவிடமும் மிக அவசியம். 2023ஆம் ஆண்டுக்குள் தமிழக மக்கள் அனைவருக்கும் வீட்டு வசதி ஏற்படுத்திக் கொடுக்கும் வண்ணம் விஷன் 20-23 உருவாக்கப்பட்டது.

அதன்படி குடிசைகளற்ற நகரங்களை உருவாக்கும் திட்டத்தின் கீழ், நகர குடிசை பகுதிகளில் வாழும் குடும்பங்களுக்கு 58 ஆயிரத்து 356 கோடி செலவில் 9.08 லட்சம் குடியிருப்புகளையும், வீடுகளையும் 2023ஆம் ஆண்டுக்குள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்திலுள்ள அனைத்து நகரங்களையும் குடிசை பகுதிகளற்றதாக மேம்படுத்திட  அம்மா எங்களுக்குப் பாதை அமைத்துத் தந்துள்ளார்” என்று பேசினார்.

மேலும் பேசிய அவர்; 4.80 லட்சம் குடியிருப்புகள் கட்டுவதற்கு ஒப்புதல் பெறப்பட்டு மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் தற்போது அதற்கான பணிகள்  வேகமாக நடைபெற்று வருகிறது. மீதமுள்ள குடியிருப்புகள் கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் குறிப்பிட்ட ஓபிஎஸ், சென்னை நதியோரங்களின் ஓரத்தில் வாழும் குடிசைப் பகுதி மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு, பசுமைப் பகுதிகளாக மேம்படுத்தவும்,  நான்காயிரத்து 600 கோடியில்  38 ஆயிரம் குடும்பங்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது” என்றும் தெரிவித்தார்.