வரும் 10 ஆம் தேதி தமிழக அரசுக்கு எதிராக முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் நடத்தப்படும் என அறிவித்த போராட்டம் ஆகஸ்ட் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு, பரவி வரும் டெங்கு காய்ச்சல், நீட் தேர்வு போன்றவற்றைக் கண்டித்து சென்னையில் வரும் 10 ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதுடன், டெங்கு  காய்ச்சலும் வேகமாக பரவி வருகிறது. இதே போல நீட் விவகாரத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்படவில்லை என ஓபிஎஸ் அணியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

தமிழக அரசு என்றாலே ஊழல் அரசு என்று மக்கள் கருதுவதாகவும் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில், தமிழக அரசை எதிர்த்து முதல் முறையாக ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக  அறிவித்திருந்தார். 

இந்த நிலையில், இன்று ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த கே.பி. முனுசாமி, சென்னை, காவல்துறை இயக்குநரிடம் 10 ஆம் தேதி போராட்டத்துக்கு அனுமதி கேட்டு மனு செய்தார்.

ஆனால் காவல் துறையினர் கேட்டு கொண்டதற்கிணங்க ஒபிஎஸ் அறிவித்த போராட்டம் ஆகஸ்ட் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.