ops press meet at palani murugan temple
எல்லாம் மேலே இருப்பவர் பார்த்துக் கொள்வார்…தன்னை அவமரியாதையாக பேசிய திண்டுக்கல் சீனிவாசனுக்கு ஓபிஎஸ் பதிலடி…
முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்ஐ அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அவமரியாதையாக பேசியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, எல்லாம் மேலே இருப்பவர் பார்த்துக் கொள்வார் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசையும், அதிமுகவின் இரண்டு அணிகளையும் மத்தியில் ஆளும் பாஜக தான் இயக்கி வருகிறது என பொதுவாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதற்கேற்றார்போல் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்ம், இன்னாள் முதலமைச்சர் இபிஎஸ்ம் புரதமர் நரேந்திர மோடியை அடிக்கடி தனித்தனியாக சந்தித்து வருகின்றனர்.
மோடியின் ஒவ்வொரு உத்தரவுக்கும் ஏற்ப தமிழக அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளதாக பரவலாக பேச்சு எழுந்துள்ளது.
அண்மையில் அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் சிலர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, தங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என நெருக்கடி கொடுத்த போது, அவர்களிடம், என் கையில் ஒன்றுமில்லை, எல்லாம் மேலே இருப்பவர் பார்த்துக்கொள்கிறார் என மோடியை சுட்டிக்காட்டியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் ஓபிஎஸ் இன்று பழநிக்கு வருகை தந்து முருகன் கோவிலில் தங்கரதம் இழுத்து வழிபாடு நடத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தன்னை அவமரியாதைக் குறைவாக பேசியது அநாகரிகமானது என தெரிவித்தார். அமைச்சரின் நடவடிக்கைகள் குறித்து மேலே இருப்பவர் பார்த்துக்கொள்வார் எனவும் ஓபிஎஸ் தெரிவித்தார்.
ஓபிஎஸ் மேலே இருப்பவர் என குறிப்பிட்டது பழநிமலை மேலே உள்ள முருகனா ? அல்லது டெல்லியில் உள்ள மோடியா ? என்பது அந்த முருகனுக்கே வெளிச்சம்….
