தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி தண்ணீரை வழங்க ஆந்திர அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து பேசியதன் முடிவில் இந்த நடவடிக்கையை ஆந்திர அரசு எடுத்துள்ளது. ஒரு மணிநேரமாக நடத்தப்பட்ட இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் தமிழகத்திற்கு சாதகமான முடிவு கிடைத்துள்ளது.  இதுதொடர்பாக  அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக நடந்த பேச்சுவார்த்தையில் தமிழகம் சார்பாக முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், தமிழக அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், குடிநீர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

கிருஷ்ணா நீர் ஒப்பந்தப்படி, சென்னை குடிநீருக்காக ஆண்டுதோறும் 12 டி.எம்.சி.தண்ணீரை இரண்டு கட்டங்களாக ஆந்திரா திறந்துவிட வேண்டும். பெரும்பாலும் ஒப்பந்தப்படி தண்ணீர் வழங்காததால், சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனை சமாளிக்கும் நடவடிக்கையாக ஆந்திராவின் உதவியை நாடியது தமிழகம்.