தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கதிராமங்கலம் கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் எண்ணெய் குழாய்களை பதித்துள்ளது. இதில், கசிவு ஏற்பட்டதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு குழாய்களை பதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கதிராமங்கலம் கிராமத்தில் உள்ள விளை நிலங்களில் ஓ.என்.ஜி.சி தனது எண்ணெய் குழாய்களை பதித்தால், கசிவு ஏற்பட்டு, விளைநிலங்கள் கடுமையான சேதம் அடைந்தன. இதற்கு கண்டனம் தெரிவித்து, ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிராக பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கதிராமங்கலம் போராட்டங்களுக்கு காரணமான ஓஎன்ஜிசி நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ‘மத்திய பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசி நாட்டின் எரிசக்தித்துறையின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டு கொண்டிருக்கிறது.

கடந்த 60 ஆண்டுகளாக தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் உள்ள எண்ணெய் வளங்களை அறிந்து நாட்டுக்காகப் பணியாற்றி வரும் நிறுவனம் ஓஎன்ஜிசி தஞ்சை காவிரி படுகையில் மட்டும் சுமார் 700 எண்ணெய் கிணறுகளை கண்டறிந்துள்ளோம்.

தற்போது ஓஎன்ஜிசியின் செயல் நடவடிக்கைகளுக்கு எதிராக வேண்டுமென்றே சில தவறான கருத்துகள் பரப்பப்பட்டு வருகிறது. தமிழக மக்கள் இந்த தவறான கருத்துக்களுக்கு செவி சாய்க்காமல் நாட்டின் வளர்ச்சி பணிகளுக்கு உதவும் ஓஎன்ஜிசிக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்’ என குறிப்பிட்டுள்ளது.