தஞ்சாவூர்

கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி கதிராமங்கலத்தில் மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கேயே சமையல் செய்தும் சாப்பிட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஆழ்துளை கிணறுகளை அமைத்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இதற்காக அப்பகுதி மக்கள் பல்வேறு கட்டப் போராட்டங்களையும் நடத்தி வந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.

“கைது செய்தவர்களை விடுதலை செய்ய வேண்டும்.

கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற வேண்டும்” என்பன உள்ளிட்ட பல்வேறுக் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கதிராமங்கலம் மக்கள் அங்குள்ள ஐயனார் கோவில் தோப்பில் காத்திருப்புப் போராட்டம் நடத்தினர். பின்னர் அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டனர்.

இந்தநிலையில் நேற்று மாலை ஆட்சியர் அண்ணாதுரை கதிராமங்கலத்திற்கு வந்தார். கோரை வாய்க்கால் வெட்டும் பணி உள்பட பல்வேறுப் பணிகளை அவர் பார்வையிட்டார்.

பின்னர் ஓ.என்.ஜி.சி. எண்ணெய் குழாயில் கசிவு ஏற்பட்ட வனதுர்க்கை அம்மன் கோவில் பகுதிக்குச் சென்றார். அங்கு கச்சா எண்ணெய் கசிந்த ஸ்ரீராம் என்பவரது வயலை பார்வையிட்டார்.

அப்போது கும்பகோணம் உதவி ஆட்சியர் பிரதீப்குமார், தாசில்தார் கணேஷ்வரன், ஊரக வளர்ச்சி முகமை உதவி இயக்குனர் கண்ணன். துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன், ஆய்வாளர் ராஜேந்திரன், ஒன்றிய ஆணையர்கள், மின்வாரிய அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.